கௌதம புத்தரைக் கூட கண்ணீர் சிந்த வைக்கும் நிலையில் பிக்குகளின் செயற்பாடுகள் உள்ளன.

கௌதம புத்தரைக் கூட கண்ணீர் சிந்த வைக்கும் நிலையில் பிக்குகளின் செயற்பாடுகள் உள்ளன.

மட்டக்களப்பு மாநகர சபையின் 24 ஆவது அமர்வானது நேற்றைய தினம் இடம்பெற்றது. இவ்வமர்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர் துரைசிங்கம் மதன் அவர்களால் முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் சட்டத்திற்கு முரணாக வகையில் விகாரை ஒன்றினை அமைத்தமை மற்றும் நீதி மன்றத் தீர்ப்பையும் மீறி மரணித்த விகாராதிபதியின் உடலை பிள்ளையார் ஆலய தீர்த்தக்கரை ஓரமாக தகனம் செய்தமைக்கான கண்டனத்தையும், அவ்வாறு செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தி கொண்டுவரப்பட்ட பிரேரணையினை முன்வைத்து உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.


தமிழரின் கலாசாரம் சமய பண்பாட்டு விடயங்களை மீறி நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக்கரையிலே தேரரின் உடலினை எரித்தமை மற்றும் நீதி மன்றினை அவமதித்தமைக்காக இந்த உயரிய சபையில் எமது கண்டனங்களை தெரிவிக்கும் முகமாகவும், பொது மக்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டமைக்காகவும் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டும் இந்தப் பிரேரiயினை சமர்ப்பிக்கின்றேன்.

நாங்கள் தேரரின் உடலை எந்த இடத்திலும் எரிக்க வேண்டாம் என கூறவில்லை. அதனை எரிக்கலாம் அது அவர்களது உரிமை, கடமை ஆனால் ஆலய தீர்த்தக்கரையிலேயே எரித்தமைதான் உண்மையிலேயே கண்டிக்கத்தக்க விடயம். எமது களுதாவளைப் பிள்ளையார் ஆலய முன்றலிலோ அல்லது மாமாங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தக் கரையிலோ சடலத்தை எரித்திருந்தால் எமது மனம் எவ்வளவு புண்பட்டிருக்கும். முல்லைத்தீவில் நடந்தாலும் எமது மாகாணம் விட்டு வேறு மாகாணத்தில் நடைபெற்றிருந்தாலும் அதை நாம் வெறுமனே விட்டு வேடிக்கை பார்க்க முடியாது.

ஆனந்த சுதாகரனுக்கு அவரது குடும்ப நிலை கருதி பொது மன்னிப்பினை வழங்குமாறு ஜனாதிபதியிடம் ஒட்டு மொத்த சிறுபான்மை சமுகமும் வேண்டி நின்றது. ஆனால் அவர் பேரினவாதத்தில் ஊறிய ஒருவருக்கு பொது மன்னிப்பு வழங்கி சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைகளை தூண்டிவிட்டுள்ளார். மதகுரு ஒருவருக்குரிய பண்புகளிலிருந்து விலகி சிறுபான்மையினருக்கு எதிராக ஆக்கிரோசமாகவும், தகாத வார்த்தைகளால் பேசியும் இன வன்முறைகளை தூண்டும் விதமாக செயற்பட்டு வருகின்றார். இன்று இலங்கையில் சிறுபான்மையோருக்கு எதிராக இத்தகைய பௌத்த பிக்குகள் செயற்படும் விதத்தினை நினைத்து கௌதம புத்தர் கூட கண்ணீர் சிந்திக்கொண்டிருப்பார்.

கௌரவமான நீதிமன்றின் தீர்ப்பினையும் மதிக்காது குறித்த பௌத்த தேரர்கள் அந்த நீதிமன்ற சட்டத்தினை நடைமுறைப்படுத்திய பொலிசார் நியாயத்திற்காக வாதடிய சட்டத்தரணி சுதாஸ் உள்ளிட்ட பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்தியவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். அவ்வாறு தண்டிக்கப்பாவிட்டால் பாமர மக்களுக்னு ஒரு நீதி, பௌத்த மதகுருமார்களுக்கு ஒரு நீதியா என்கின்ற ஐயம் ஏற்பட்டுவிடும். எனவே இந்தப் பிரேரணையினை இந்தச் சபையின் தீர்மானமாக நிறைவேற்றி நீதிச் சேவை ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதி அமைச்சு உள்ளிட்ட அனைவருக்கும் அனுப்பி வைக்க அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

குறித்த பிரேரணை சபையில் பரிசீலிக்கப்பட்ட நிலையில் ஒரு உறுப்பினர் நடுநிலை வகிக்க ஏனைய உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது