போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு





போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூவருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.குறித்த வழக்கு இன்று புதன்கிழமை கல்முனை நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
.

இதன் போது கல்முனைகுடி பகுதியில் உள்ள தைக்கா வீதியில் மோட்டார் சைக்கிளுடன் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த இளைஞன் உட்படக் குறித்த இளைஞனின் வாக்குமூலத்தினை அடிப்படையாகக் கொண்டு அப்பகுதி வீடு ஒன்றில் கேரள கஞ்சாவினை தராசில் அளவீடு செய்த இரு பெண்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.இதில் பெண் சந்தேகநபரான பாத்திமா சுமையா என்பவருக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டதுடன் மோட்டார் சைக்கிளில் கஞ்சாவினை கொண்டு சென்ற இளைஞன் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18 ஆம் விளக்க மறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இது தவிரக் கஞ்சாவினை தம் வசம் வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இளம் பெண்ணான சகாப்தீன் ரம் சீயா என்பவர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் தமது தரப்பு நியாயங்களை முன்வைத்துப் பிணை கோரிக்கை ஒன்றினை நீதிவானிடம் கேட்டதுடன் அநியாயமாக எமது தரப்பு மீது குற்றச்சாட்டு பொலிஸாரினால் முன்வைக்கப்பட்டுள்ளதாக நீதிவானிடம் குறிப்பிட்டனர்.மேலும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவிற்கும் எமது தரப்பிற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

என்றதுடன் கைதானவரைப் பெண் பொலிஸாரின் துணை எதுவும் இன்றியே ஜீப் வண்டியில் ஏற்றியதாகக் குற்றச்சாட்டினை சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.பொலிஸார் தவறான பொய்யான தகவல்களை சில வேளை தந்திருக்கலாம் என்ற நிலைமையைச் சுட்டிக்காட்டி சந்தேகநபர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் எல்லோரும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் நிறையை நீதிமன்றத்தில் வைத்து அளவீடு செய்யவேண்டும் என நீதிவானைக் கோரினர்.


இதனைச் செவிமடுத்த நீதிவான் சிறிய தொகை கஞ்சா மீட்கப்பட்டாலும் அதன் பெறுமதி சிறிது பெரிது எனக் கூற வேண்டியதில்லை. அதனை தம்வசம் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். எவ்வாறாயினும் பொலிஸாரால் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்ட குறித்த சான்றுப்பொருட்கள் தேவை ஏற்படின் அளவீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டார்.

மேற்கூறியதாக வாதப்பிரதிவாதங்கள் குறித்த வழக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு இறுதியாக எதிர்வரும் ஒக்டோபர் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் சந்தேகநபரை வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் சட்டத்தரணிகளின் வாதங்களை மறுத்த பொலிஸ் தரப்பினர் பிணை விண்ணப்பங்களுக்கு தமது ஆட்சேபனையைத் தெரிவித்து சந்தேகநபர் தொடர்பில் தகுந்த ஆதாரங்கள் தம்வசம் உள்ளதாக நீதிவானின் கவனத்திற்குக் கொண்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.