நிலப் பற்றாக்குறையே கல்முனையின் அபிவிருத்திக்கு சவால்





கல்முனையில் நிலவும் அரச நிலப் பற்றாக்குறை காரணமாக பணம் இருந்தும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் பாரிய சவாலை எதிர்நோக்கி வருகின்றோம் என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

சீனாவின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படவுள்ள கல்முனை நகரத் திட்டமிடல் வரைபினை (Master Plan) தயாரிப்பது தொடர்பிலான மூன்றாம் கட்ட நிபுணத்துவ ஆலோசனைக் கூட்டம் நேற்று(16) கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தலைமை வகித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு முதல்வர் றகீப் மேலும் தெரிவிக்கையில்;

"எமது கல்முனை மாநகரில் காணிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இது அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு பாரிய சவாலாக இருக்கிறது. இங்கு அரச நிலங்களை அடையாளப்படுத்தி, பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. இருக்கின்ற சில காணிகளைக்கூட அபிவிருத்திக்காக எடுத்துக் கொள்வதில் பிரச்சினை காணப்படுகிறது. பொதுமக்களும் ஒத்துழைப்பதற்கு தயாரில்லை.

இதனால் சில அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்காக ஒதுக்கப்படுகின்ற நிதிகள் திரும்பிச் செல்கின்ற சூழ்நிலை ஏற்படுகின்றது. அமைச்சர் ரவூப் ஹக்கீமின் முயற்சியினால் கல்முனை மாநகர பிரதேசங்களுக்கான திரவக் கழிவகற்றல் முகாமைத்துவத் திட்டத்திற்கு சுமார் 34 ஆயிரம் மில்லியன் ரூபா நிதியை கனடா அரசாங்கம் தந்துதவ முன்வந்துள்ள போதிலும் அதற்குரிய பிரதான கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை அமைப்பதற்கு நான்கு ஏக்கர் காணியை பெற்றுக்கொள்ள முடியாதிருக்கிறது.

அவ்வாறே திண்மக்கழிவுகளைக் கொண்டு மின்சார உற்பத்தித் திட்டத்தை முன்னெடுப்பதற்கு அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்று முன்வந்தது. அதற்கு ஐந்து ஏக்கர் நிலம் கோரப்பட்டது. அவ்வாறே பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் வருகின்றன. பணமும் தயார் நிலையில் உள்ளது. ஆனால் நிலம்தான் எம்மிடம் இல்லை. இருந்தபோதிலும் நிலங்களை அடையாளப்படுத்துவதற்கான முயற்சிகளை நாம் கைவிடவில்லை" என்றும் முதல்வர் றகீப் குறிப்பிட்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கல்முனை நகரத் திட்டத்தை தயாரிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைளை துரிதமாக முன்னெடுப்பது என்றும் பொது அபிவிருத்தித் திட்டங்களுக்கான காணிகளை அடையாளப்படுத்தி, அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான மூலோபாய ஏற்பாடுகளை மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டதுடன் இவற்றுக்காக தொடர்புடைய அதிகாரிகளைக் கொண்ட நிபுணர் குழுவொன்றும் அமைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் அம்பாறை மாவட்ட நிலஅளவை அத்தியட்சகர் எம்.எம்.றபீக், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் ரஞ்சித் பண்டார உள்ளிட்ட அதிகாரிகள், தென்கிழக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட பீடாதிபதி கலாநிதி எஸ்.எம்.ஜுனைதீன் உள்ளிட்ட சிரேஷ்ட விரிவுரையாளர்கள், பிரதேச செயலகங்கள், கட்டிடங்கள் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் போன்ற அரச நிறுவனங்களின் பிரதிநிதிகளும், கல்முனை மாநகர சபையின் திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தனர்.