ரூ.1000 கோடி நஷ்டஈடு கோரி சுமந்திரன் கோரிக்கை கடிதம்



மூன்று நாளேடுகளுக்கு எதிராக

தேர்தல் பிரசாரத்தின் போது தான் தெரிவித்த கருத்தை திரிபுபடுத்தி செய்தி வெளியிட்ட 3 பத்திரிகைகளுக்கு எதிராக ஒவ்வொரு பத்திரிகைகளிடமும் தலா ஆயிரம் கோடி ரூபா நஷ்டஈடு கோரி தனது சட்டத்தரணியூடாக கோரிக்கை கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின்
பேச்சாளரும் பாராளுன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். 

தான் இவ்வாறான கருத்தை தெரிவிக்கவில்லை என்பதுடன் திரிபுபடுத்தியே இந்த செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் சுமந்திரன் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்துள்ளதுடன் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் பதில் பொலிஸ் மா அதிபருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

சிங்கள மக்களை தோற்கடிப்பதற்காக தமிழ் மக்கள் சஜித்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கூறியதாக அருண பத்திரிகை 2019 நவம்பர் 12 ஆம் திகதியும் சிலோன் டுடே மற்றும் மவ்பிம ஆகிய பத்திரிகைகள் 2019 நவம்பர் 13 ஆம் திகதியும் மேற்படி பொய்யான செய்தியை பிரசுரித்துள்ளன. அவ்வாறு வெளியிடப்பட்ட செய்தி அப்பட்டமான பொய்யாகும்.

எனவே இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி, சம்பவம் தொடர்பாக சட்டப் பிரகாரம் நீதிமன்றுக்கு தெரியப்படுத்தி சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்யுமாறு எம்.ஏ.சுமந்திரனின் சார்பில் சின்னத்துரை சுந்தரலிங்கம் மற்றும் பாலேந்திரா சட்ட நிறுவனம் பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளது. அத்துடன் அக் கடிதத்தின் பிரதியொன்றை தேர்தல் ஆணையாளருக்கும் அனுப்பி வைத்துள்ளது.

இவ்வாறான பொய்ச் செய்தி இன வெறுப்பை பரப்புவதுடன் இனப் பாகுபாட்டை தூண்டுவதாகவும் அமைகிறது என அக் கடிதத்தில் குறிப்பிடப்படுள்ளது.