ஒரே தடவையில் 3 ஆயிரம் சிப்பாய்களை இணைத்து போர் செய்தேன்



இராணுவத்திற்கு ஒரே தடவையில் 3000ற்கும் அதிகமான படைவீரர்களை இணைத்துக் கொண்டு யுத்தத்தினை நிறைவு செய்தோம்.இதனடிப்படையில் ஏன் உயர்தரம் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்ய முடியாது. 

அனைத்து மாணவர்களும் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பினை ஏற்படுத்துவேன் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கலவானை நகரில் இன்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசியல்வாதிகளின் தேவைகளுக்காகவும், சர்வதேச அமைப்புகளின் கோரிக்கைகளுக்காகவும் புலனாய்வு பிரிவினர் பயன்படுத்திக் கொள்ளப்பட்டார்கள். இதன் விளைவு தேசிய பாதுகாப்பினை இன்று பலவீனப்படுத்தியுள்ளது. தேவையற்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அமைச்சரவையினால் மக்களின் பாதுகாப்பினை பலப்படுத்த முடியாது.

வெளியிடப்பட்டுள்ள தேர்தல் கொள்கை பிரகடனத்தில் தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. எக்காரணிகளுக்காகவும் தேசிய பாதுகாப்பினை இரண்டாம் பட்சமாக்கமாட்டேன். பலவீனப்படுத்தப்பட்டுள்ள புலனாய்வு பிரிவு குறுகிய காலத்திற்குள் பலப்படுத்தப்படும்.

வீழ்ச்சியடைந்துள்ள தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் எமது தேர்தல் கொள்கை பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அனைத்து திட்டங்களும் பதவி காலத்தில் முழுமையாக செயற்படுத்தப்படும். தேசிய உற்பத்திகளை வலுப்படுத்துவதற்கான செயற்திட்டங்கள் துறைசார் நிபுணர்களின் ஊடாக வகுக்கப்பட்டுள்ளது.

இளம் தலைமுறையினர் இன்று தொழிற்துறைகளையும் உயர்தர கல்வியினை பெற்றுக் கொள்ள முடியாத நிலைமையில் உள்ளார்கள் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் தரமான கல்வி திட்டங்கள் கொள்கை பிரகடனத்திற்கு அமைய செயற்படுத்தப்படும்.

கல்வி துறையினை மேம்படுத்த ஒரு மாகாணத்திற்கு மட்டுமல்லாமல் பல்கலைகழகங்கள் உருவாக்கப்பட்டு தொலை நோக்கு கற்கை நெறிகள் அறிமுகப்படுத்தப்படும். இளம் தலைமுறையினரது வாழ்க்கை தரத்தினை மேம்படுத்த குறுகிய காலத்தில் அதிக நிதி முதலீடு செய்யப்படும்.

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழகம் செல்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.