விமான சேவை கட்டணம் 57 வீதத்தினால் அதிகரிப்பு



பெப்ரவரி முதல் அமுலில் 40 வருடங்களின் பின்னர் மாற்றம்
40 வருடங்களின் பின்னர் வெளிநாட்டு விமானங்களிடமிருந்து அறவிடும் கட்டணத்தை 57 வீதத்தினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். இதனூடாக வருடாந்தம் 2,225.6 மில்லியன் வருமானம் ஈட்ட எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவரது அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறுகையில்,

எந்த ஒரு நாட்டின் வான் பரப்பினூடாக பறக்கும் வெளிநாட்டு விமானங்களிடமிருந்து  அந்த நாட்டிற்கு கட்டணம் அறிவிடமுடியும். இவ்வாறு கட்டணம் அறிவிடும் அதிகாரம் சிவில் விமானச் சேவை அதிகார சபைக்கே உள்ளது. இலங்கை வான்பரப்பினூடாக தினமும் 125 விமானங்கள் பயணம் செய்கின்றன. இதனூடாக தினமும் 3.9 மில்லியன் ரூபா கிடைத்து வருகிறது. வருடாந்தம் 1,412.6 மில்லியன் ரூபா கிடைக்கிறது.

கட்டண திருத்தத்துடன் தினமும் 6.1 மில்லியன் ரூபா கிடைக்கும். வருடாந்தம் 2,225.6 மில்லியன் வருமானம் பெற முடியும். இது கடந்த காலத்தை விட 57 வீத அதிகரிப்பாக இருக்கும்.

இந்த நிதியை உள்ளக விமான நிலையங்களை அபிவிருத்தி செய்ய பயன்படுத்தவிருக்கிறோம்.

எமது நாட்டின் வான்பரப்பு, நாட்டை போன்று 20 மடங்கு பெரியதாகும். இதற்கு முன்னர் யாரும் இதனூடாக பிரியோசனம் காணவில்லை.

புதிய கட்டண அதிகரிப்பு எதிர்வரும் பெப்ரவரி முதல் அமுலுக்கு வரும். இந்திய வான் எல்லையில் விமான பயணங்கள் அதிகரித்துள்ளதால் இலங்கை விமான எல்லையின் ​கேள்வி உயர்ந்து வருகிறது. எதிர்காலத்தில் மேலும் கட்டணத்தை அதிகரிக்க முடியும் என்றார்.