ஒஸ்ரேலியா மெல்பேர்ணின் மாவீரர் நாள் நிகழ்வுகள்



2019ம் ஆண்டு தமிழீழ மாவீரர் நாள் மெல்பேணில் உணர்வுபூர்வமாக நினைவு கொள்ளப்பட்டது. ஒவ்வோராண்டும் வழமையாக நிகழ்வு நடைபெறும் ஸ்பிறிங்வேல் நகர மண்டபத்தில் 27/11/2019 புதன்கிழமை மாலை 6 மணிக்கு நிகழ்வு தொடங்கியது.

மணியொலியுடன் தொடங்கிய நிகழ்வை பவித்திரன் சிவநாதன். சிரேக்சனா நந்தகரன் ஆகிய இருவரும் தொகுத்து வழங்கினர். பொதுச்சுடரினை தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் திரு ரகுலேஸ்வரன் கிருஸ்ணபிள்ளை அவர்கள் ஏற்ற அதனைத் தொடர்ந்து தேசியக் கொடியேற்றும் நிகழ்வு இடம்பெற்றது.

அவுஸ்திரேலியத் தேசியக் கொடியையும் தமிழீழத் தேசியக் கொடியையும் முறையே தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களான ஹரிதாஸ் ஞானகுணாளன், ரமேஷ் பாலகிருஷ்ணர் ஆகியோர் ஏற்றினர். தொடர்ந்து மாவீரர் லெப்.சங்கர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மருத்துவர் திரு. ஈஸ்வரன் கணபதிப்பிள்ளை அவர்களும் மாவீரர் 2ஆம் லெப். மாலதி அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்த திருமதி கலைமதி கமலகுமார் அவர்களும் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து மாவீரர் குடும்பத்தினரும் உரித்துடையோரும் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரர் திருவுருவப்படத்துக்கு விளக்கேற்றி மலர்வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் மலர்வணக்கம் செலுத்தினர். அடுத்ததாக அக வணக்கமும் அதனைத் தொடர்ந்து துயிலுமில்லப்பாடலும் ஒலிபரப்பப்பட்டது. அதன் பின்னர், உறுதியுரையை திரு கபிலன் நந்தகுமார் அவர்கள் வாசித்தார்.

கலை நிகழ்வுகளில் முதலாவதாக நடனாலயா பள்ளி மாணவர்களின் மாவீரர் வணக்க நடனம் இடம்பெற்றது. அதற்கு அடுத்ததாக செல்வன் துவாரகன் சந்திரன் அவர்களின் கவிதையும் சிற்றுரையும் இடம்பெற்றது. அவர் தனது உரையில் இன அடையாளங்கள், போராட்ட வரலாறுகளைப் பேணுதல், அவற்றை தமிழ்ப்பள்ளிகளில் கற்றுத்தர வேண்டிய முக்கியத்துவம், இங்கு பிறந்து வளரும் குழந்தைளுக்கும் எம் வரலாற்றை பெற்றோர்கள் சொல்லிக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்பன குறித்துப் பேசினார்.

அடுத்ததாக இன்னுமொரு மாவீரர் வணக்க நடனம் இடம்பெற்றது. இந்நடனத்தை Niruththa Indian Fine Arts பள்ளி மாணவர்கள் வழங்கினார்கள். கலை நிகழ்வுகளில் இறுதியாக “விளையும் பயிர்கள் அழிவதா?” என்கிற நாடகம் இடம்பெற்றது. போராட்டக் களத்தின் சில சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு உணர்வுபூர்வமாக இந்நாடகம் அரங்கேற்றப்பட்டது.

தொடர்ந்து தேசியக்கொடிகள் இறக்கப்பட்டடு உறுதியேற்பு நிகழ்வோடு மாவீரர் நாள் நிகழ்வுகள் 8.25 மணியளவில் நிறைவடைந்தன.

வழமைபோல் இவ்வாண்டும் “காந்தள்“ மலர் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் வெளியிடப்பட்டது.