வானிலை அறிக்கை



வடகிழக்கு பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் அதிகரிக்கும் என்று வளிமண்டவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் மழை பெய்யும். ஏனைய இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம். வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை, பொலநறுவை, பதுளை மாவட்டங்களின் சில இடங்களில் 100 முதல் 150 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய மலைநாட்டிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காற்றின் வேகம் மணிக்கு 40 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.