வெல்லவூர் சுபேதன் எழுதிய நதியில் நீந்தும் நட்சத்திரங்கள் நூல் வெளியீட்டு விழா

(வி.ரவீந்திரமூர்த்தி)



வெல்லவூர் சுபேதன் எழுதிய நதியில் நீந்தும் நட்சத்திரங்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிறன்று (10.11.2019) வெல்லாவெளி கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் கவிக்கோ வெல்லவூர்க் கோபால் தலைமையில் நடைபெற்றது.
வெல்லாவெளி சக்தி கலா மன்றத்தின் வெளியீட்டில் நடைபெற்ற இவ்விழாவின் முதன்மை அதிதிகளாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் செல்வி.ஆர்.ராகுலநாயகி, உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் சட்டத்தரணி.மு.கணேசராசா, வெல்லாவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி W.M. ஆனந்தசிறி மற்றும் முதன்மைப் பிரதி பெறும் அதிதியாக மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சைவப் புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் வெல்லாவெளிப் பிரதேசத்தைச் சேர்ந்த மன்றங்கள், கழங்களின் உறுப்பினர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், ஊர் மக்கள் மற்றும் யாழ்பாணம் கவிஞர் ஆ.முல்லைத்திவ்யன் என மண்டபம் நிறைந்த அவையோர் மத்தியில் மிகச் சிறப்பாக விழா நடைபெற்றது.

அறநெறிப் பாடசாலை மாணவர்களின் இறை வணக்கத்துடனும் வெல்லாவெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சி.கு. சாம்பசிவக் குருக்களின் ஆசியுரையுடனும் ஆரம்பித்த இந்நிகழ்விலே தமிழ்மொழி வாழ்த்து, வரவேற்பு நடனம் ஆகியவற்றை மட்/ வெல்லாவெளி கலைமகள் வித்தியாலய மாணவர்கள் நிகழ்த்தினர். வரவேற்புரையினை ஆசிரியர் இ.தனுராஜ் நிகழ்த்த வெளியீட்டுரையினை ஓய்வு நிலை அதிபர் த. விவேகானந்தம் நிகழ்தினார். நூல் நயவுரை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விவேகானந்தர் அழகியல் கற்கை நிறுவகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் க. மோகனதாசன் நிகழ்த்தினார்.

அனைத்து அதிதிகளின் உரையும் இளம் கவிஞரான வெல்லவூர் சுபேதனை எழுத்துத் துறையில் ஊக்கப்படுத்தும் வகையிலேயே அமைந்திருந்தது. இவ்வாறான கவிதைகள்   மூலம் எமது பிரதேசத்தின் மண்வாசனை மற்றும் வரலாற்றுச் சிறப்புக்களை பதிவேற்றம் செய்து நமது எதிர்காலச் சந்ததியினருக்கு கையளிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டனர். இதன் போது நூலாசிரியருக்கான கௌரவிப்பும் இடம்பெற்றது. இதில் மூத்த கவிஞரான ஆ.மூ.சி. வேலழகன் மற்றும் கவிக்கோ வெல்லவூர்க் கோபால் போன்றோர் கலந்து கொண்டு நூலாசிரியரைக் கௌரவித்தமை இளம் கவிஞரான வெல்லவூர் சுபேதனுக்கு இது நல்லதோர் ஆரம்பம் எனலாம்.