தற்போதைய ஜனாதிபதி நாட்டின் முன்மாதிரிமிக்க அரசியல் தலைவர் என்று மகாசங்கத்தினர் பாராட்டு



தூர நோக்குடன் செயற்படும் தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாட்டின் முன்மாதிரிமிக்க அரச தலைவராவார் என்று மகாசங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

திரிபீடகத்தை உலக நினைவுப் பதிவேட்டில் உள்ளடக்குவதற்கான விண்ணப்பத்தை தயாரிக்கும் நிபுணர் குழு, திரிபீடகத்தை பேணிப் பாதுகாக்கும் சபை, பௌத்த ஆலோசனை சபை, பௌத்த புலமைத்துவ சபை, அகில இலங்கை சாசன பாதுகாப்புச் சபை ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் மகாசங்கத்தினருக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று(13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போதே மகாசங்கத்தினர் இதனை தெரிவித்தனர். திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தி அதனை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை நாட்டின் பௌத்த சாசனத்திற்காக ஜனாதிபதி மேற்கொண்ட ஒரு முக்கியமான பணி எனத் தெரிவித்த மகாசங்கத்தினர், நாட்டின் பிரிவெனா கல்வியை மேம்படுத்துவதற்கும் ஜனாதிபதி முன்னெப்போதும் இல்லாத வகையில் பல பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் உள்ள குறைந்த வசதிகளையுடைய விகாரைகளை அபிவிருத்தி செய்வதற்கும், அவற்றில் உள்ள பிக்குமார்களின் நலன் பேணலுக்காகவும் ஜனாதிபதி கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் விரிவான பல நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்ததாகவும் தேரர்கள் குறிப்பிட்டனர்.

திரிபீடகத்தை உலக நினைவுப் பதிவேட்டில் உள்ளடக்குவதற்காக அடுத்த கட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவும் பௌத்த சாசனத்தின் பாதுகாப்பிற்காகவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அகில இலங்கை சாசன பாதுகாப்பு சபைக்கு ஜனாதிபதியினால் 100 இலட்ச ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது.