டெங்கு நோயில் இருந்து இளம் சமூகத்தை பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு


நாட்டின் பல பாகங்களிலும் தற்போது அடிக்கடி பெய்து வருகின்ற மழை காரணமாக டெங்கு நோய் பரவக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகளவில் காணப்படுகின்றது.

நாடளாவிய ரீதில்  டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு  தெரிவித்தது.

மேலும்  இவ்வாறான காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் தாமதமின்றி அரசு வைத்தியசாலைக்கு அல்லது அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரிடம் சென்று உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறும் தங்களது வீடுகளையும் வீட்டுச் சூழலையும் டெங்கு நுளம்பு பரிசோதனை மேற் கொள்வதற்காக சுகாதார வைத்திய அதிகாரி, மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர், நகரசபை ஊழியர்கள், வருகை தர உள்ளனர்.

இதன்போது டெங்கு நோயை பரப்பும் நுளம்பு குடம்பிகள் அடையாளம் காணப்படுமிடத்து கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அறிவித்தது .

வீடுகளில் காணப்படும் கிணறுகளில் நுளம்பு குடம்பிகள் அவதானிக்கப்பட்டால் அக் கிணறுகளுக்கு குடம்பிகளை உண்ணக்கூடிய மீன்களை விட்டு மூடி கட்டவும்.

நீர்த் தாங்கிகள் குழாய்க் கிணறுகள் என்பவற்றை நுளம்பு வலையினால் மூடி கட்டுவதுடன் நீர் தேங்க கூடிய நிலையில் உள்ள பீலிகளையும், பாவிக்காத கிணறுகள், குழாய் கிணறுகளை அகற்றவும் அல்லது மூடிவிடவும்.

வெற்றுக்காணிகளையும், பராமரிப்பின்றி காணப்படும் இடங்களையும் உடனடியாக துப்பரவு செய்யவும்.

காய்ச்சலினால் பிடிக்கப்பட்ட சகலரும் குறிப்பாக மாணவர்களுக்கு போதிய படுக்கை ஓய்வு அளிப்பதுடன் எக்காரணம் கொண்டும் பாடசாலை, பிரத்தியேக வகுப்புகளுக்கு மற்றும் வெளியிடங்களுக்கு அனுப்பாமல் பாதுகாக்கவும்.

தொடர்ச்சியாக மூடிக்கிடக்கும் இடங்களை திறந்து வாரத்துக்கு ஒரு முறையாவது துப்புரவு செய்து நுளம்புகளற்ற சூழ்நிலையைப் பேணவும்.

தங்களது வீடுகளில் சேரும் குப்பைகளை நகரசபை வாகனம் வரும்போது அவர்களிடம் கையளிக்க வேண்டும்.

என்பன போன்ற ஆலோசனை பொதுமக்களுக்கு வழங்கியதுடன் மேற்குறித்த நடைமுறைகளை பின்பற்றி எமது உயிர்களை குறிப்பாக இளம் சமூகத்தினர் உயிர்களை காப்பாற்றும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு என தெரிவித்தது.