ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் கோத்தாபய



இலங்கை ஜனநாயக சேசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இன்று காலை அனுராதபுரம் ருவன்வெலிசாயவுக்கு சென்ற கோத்தாபய ராஜபக்ஷ சற்று முன்னர் ஜனாதிபதியின் செயலாளர் உதய செனவிரத்ன முன்னிலையில் ஜனாதிபதியாக சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

எதிர்காலத்தில் தன்னுடன் இணைந்து பயணிக்க வருமாறு தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) காலை, அநுராதபுரம்- றுவன்வெலிசாயவில், இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்துகொண்ட கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய விசேட உரையிலேயே இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

குறித்த உரையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கை வாழ் பெரும்பான்மையான மக்கள் எனக்கு வழங்கியுள்ள ஆணைக்கு இணங்க நான் இன்று 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளேன்.

நான் மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து மக்களதும் எதிர்க்கால சந்ததியினரதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன் என்பதை இவ்வேளையில் விசேடமாகக் கூறிக்கொள்கிறேன்.

எனது வெற்றிக்கு பெரும்பான்மையான சிங்கள மக்கள்தான் காரணமாகும். நான் எமது வெற்றியில் ஒன்றிணையுமாறு தமிழ்- முஸ்லிம் மக்களிடம் கோரியிருந்தேன்.

ஆனால், அது நிறைவேறவில்லை. எனினும், எதிர்க்காலத்தில் ஏனும் எனது செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்குமாறு நான் அனைத்து மக்களிடமும் கேட்டுக் கொள்கிறேன்.

தெற்கில் சிங்கள குடும்பமொன்றில் பிறந்தவன் நான். அந்தவகையில், பௌத்த கொள்கைகளுக்கு இணங்க செயற்படுவேன்.

எனது காலத்தில் பௌத்த தர்மத்தை பாதுகாக்கவும், ஏனைய இனங்களை பாதுகாக்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்வோம்.

எமது கலாசாரம் பாதுகாக்கப்படும். அதேநேரம், ஏனையவர்களின் நம்பிக்கை, கலாசாரத்தை பாதுகாக்கவும் நாம் நடவடிக்கை எடுப்போம்.

எனது இந்த வெற்றிக்காக ஒத்துழைத்த அனைத்து தரப்பினருக்கும் நான் இவ்வேளையில் நன்றிகளைத் தெரிவுத்துக்கொள்கிறேன்.

விசேடமாக மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷவுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நாம் இலங்கையர் என்ற வகையில் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியதே எமக்குள்ள தற்போதைய தேவையாகக் கருதப்படுகிறது.

இதற்கான வேலைத்திட்டங்களை நாம் ஆரம்பிக்க வேண்டும். எதிர்கால சந்ததியினர் பெருமையாக இங்கு வாழக்கூடிய ஒரு சூழலைத்தான் ஏற்படுத்த வேண்டும்.

இவற்றை நான் நிச்சயமாக எமது காலத்தில் மேற்கொள்வேன். தீவிரவாதம், அடிப்படைவாதம், போதைப்பொருள் வர்த்தகம், பாதாள உலகக்குழுவினர், குற்றவாளிகள் இல்லாத ஒரு சமூகத்தை நாம் நிச்சயமாக மேற்கொள்வோம்.

மேலும், எந்தவொரு சர்வதேச தரப்பினருக்கும் அடிபணியாது, சுயாதீன நாடு என்ற வகையில் இலங்கை இனிமேல் செயற்படும் என்பதையும் நான் கூறிக்கொள்கிறேன்.

இதன் ஊடாக உலகமே வியக்கும் ஒரு நாடாக இலங்கை நிச்சயமாக மாற்றமடையும். சட்டம் நீதி இலங்கையில் நிலைநாட்டப்படும். எமது கொள்கைப் பிரகடனத்தில் கூறிய அனைத்து உறுதி மொழிகளையும் நிறைவேற்ற விரைவில் நடவடிக்கை எடுப்போம்.

21 ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில், அனைத்து துறைகளும் தொழில்நுட்ப மாயமாக்கப்படும்.

எமக்கு முன்னாள் பாரிய சவால்கள் இன்று காணப்படுகின்றன. ஆனால், அதுவுமே முறியடிக்க முடியாத சவால்கள் அல்ல.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற வகையில், நாட்டின் தேவைக்காக எனது அதிகாரத்தை பயன்படுத்த ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை” என குறிப்பிட்டுள்ளார்.