தொடரும் சமையல் எரிவாயு நெருக்கடி



தினமும் ஒரு இலட்சம் சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை

கடந்த இருவாரங்களாக நீடிக்கும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை சீர்செய்வதற்காக 12 ஆயிரம் மெற்றிக் தொன் மேலதிக சமையல் எரிவாயுவை அவசரமாக இறக்குமதி செய்வதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தவிர தினமும் ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ள அதேவேளை, நாளாந்த சிலிண்டர் உற்பத்தியை 25 ஆயிரத்தினால் அதிகரிக்கவும் ஆவண செய்யப்பட்டுள்ளது.

இதே வேளை, சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள தவறான அச்சம் காரணமாகவும் மேலதிக கையிருப்பை வைத்திருக்க முயல்வதாலும் இவ்வாறான திடீர் தட்டுப்பாடு எழுந்ததாகவும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தகவல்கள் தெரிவித்தன.

சமையல் எரிவாயு விலைகள் கடந்த மாத நடுப்பகுதியில் குறைக்கப்பட்டதையடுத்து சந்தையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. சில வர்த்தகர்கள் சிலிண்டர்களை பதுக்கியதோடு சிலர் அதிக விலைக்கும் விற்க முயன்றனர்.

சுமார் 76 வீதமான சமையல் எரிவாயுவை லிட்ரோ கேஸ் நிறுவனம் சந்தைக்கு வழங்கி வருகிறது.

இந்த நிலையில் லாப் கேஸ் விநியோகம் சந்தையில் குறைவடைந்ததையடுத்து லிட்ரோ கேஸின் கேள்வி உயர்ந்ததோடு இதனுடன் இணைந்ததாக தீபாவளி பண்டிகை, மேலதிக சமையல் எரிவாயு சிலிண்டரை வாங்கி சேமித்து வைக்க முற்பட்டமை, என்பனவும் தட்டுப்பாட்டிற்கு காரணமாக அமைந்ததாக லிட்ரோ உயரதிகாரி ஒருவர் தினகரனுக்கு கூறினார்.

இந்த நிலையில் மக்கள் சமையல் எரிவாயு பெறுவதற்காக வீதிகளில் அலைந்து திரியும் நிலை ஏற்பட்டதோடு சில பிரதேசங்களில் முன்கூட்டி பதிவு செய்தே சமையல் எரிவாயு பெறும் நிலை ஏற்பட்டது.

எரிவாயு தட்டுப்பாடு விவகாரத்தினால் சுற்றுலாத் துறை மற்றும் வியாபாரத்துறைக்கும் தாக்கம் ஏற்பட்டதோடு சுமார் 3500 உணவகங்கள் வரை மூடப்பட்டதாக உணவக உரிமையாளர் சங்கம் கூறியுள்ளது.

இந்த நிலையில் நட்சத்திர ஹோட்டல்களுக்கும் உணவகங்களுக்கும் வழங்கும் வர்த்தக எரிவாயு சிலிண்டர்களை தட்டுப்பாடின்றி விநியோகித்து வருவதாக லிட்ரோ நிறுவன தகவல்கள் தெரிவித்தன. தினமும் 3 ஆயிரத்திற்கும் அதிகமான வர்த்தக எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுவதாகவும் லிட்ரோ தெரிவித்துள்ளது.

எரிவாயு கப்பல்கள் வருகை:

சீரற்ற காலநிலை காரணமாக எரிவாயு கப்பல்கள் வந்தடைவது தாமதமடைந்திருந்ததோடு கடந்த சனிக்கிழமை 3600 மெற்றிக் தொன் எரிவாயு துறைமுகத்தை வந்தடைந்ததாக நிதி அமைச்சு தெரிவித்தது.

இன்று மற்றொரு கப்பல் 3600 மெற்றிக் தொன் சமையல் எரிவாயுவுடன் இலங்கையை வந்தடைய இருப்பதோடு எதிர்வரும் சனிக்கிழமையும் மற்றொரு கப்பல் வரும் என அமைச்சு கூறியது.

தொடர்ச்சியாக நான்கு நாளைக்கு ஒரு தடவை எரிவாயு தருவிக்க லாப்கேஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதோடு போதியளவு கையிருப்பை வைத்திருக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக நிறுவன உயரதிகாரி குறிப்பிட்டார்.

இம்முறை எழுந்த நெருக்கடி நிலையை அடுத்து எரிவாயு விநியோகத்தை நாடுபூராகவும் மேலும் மேம்படுத்தவும் லிட்ரோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

லாப் கேஸ் நிறுவனமும் சமையல் எரிவாயு விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளது.

நிலைமை ஓரிரு தினத்தில் சீராகும்

தற்போதைய தட்டுப்பாடு நிலைமை குறித்து கருத்துத் தெரிவித்த வர்த்தக வாணிப அமைச்சு நிலைமை சீராகி வருவதாகவும் ஓரிரு தினங்களில் நிலைமை முற்றாக சீராகும் எனவும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தது.