தெற்காசிய கராத்தே சுற்றுப் போட்டிகளில் வெண்கலப்பதக்கத்தினை பெற்று கொடுத்த ரிசோபனை வரவேற்கும் நிகழ்வு



ஜந்தாவது தெற்காசிய கராத்தே சுற்றுப் போட்டிகளில் வெண்கலப்பதக்கத்தினை பெற்று கொடுத்து இலங்கை நாட்டிற்கு பெருமை சேர்த்த கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற ராம் கராத்தே சங்கத்தின் பயிலுனரும், திருக்கோவில் கல்வி வலய அக்கரைப்பற்று ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய பாடசாலையின்  க.பொ.த. சாதாரண தர மாணவனும் 21 வயதிற்குட்பட்ட பிரிவின் உபதலைவராக இலங்கை கராத்தே சம்மேளனத்தால் நியமிக்கப்பட்ட சோதீஸ்வரன் ரிசோபனை வரவேற்கும் நிகழ்வு நேற்றிரவு(14) அக்கரைப்பற்று தர்சங்கரி உள்ளக விளையாட்டு பயிற்சி அரங்கில் நடைபெற்றது.

கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற ராம் கராத்தே சங்கத்தின் ஸ்தாபகரும் பிரதம போதானாசிரியர் மற்றும் பயிற்றுவிப்பாளரும் ஆலையடிவேம்பு பிரதேச செயலக ஒய்வு நிலை பதவிநிலை உதவியாளருமான சிகான் கே. கேந்திரமூர்த்தியின் தலைமையில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளரும் சங்கத்தின் கறுப்பு பட்டி வீரருமான த.கஜேந்திரன் சங்கத்தின் ஆலோசகரும் ஓய்வுநிலை அதிபருமான சென்சி கே.சங்கரலிங்கம் மற்றும் சிரேஸ்ட பயிற்றுவிப்பாளர்களான சென்சி செயினுலாப்தீன், பிரதேச செயலக பதவிநிலை உதவியாளரும் கறுப்புப்பட்டி வீரருமான ஆ.சசீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

பங்காளதேசில் இருந்து வருகை தந்த ரிசோபன் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார். பின்னர் அதிதிகள் மற்றும் ராம் கராத்தே சங்கத்தின் சிரேஸ்ட் வீரர்கள் உள்ளிட்டவர்களினால் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

பங்களாதேஸ்  டாக்காவில் கடந்த வாரம் நடைபெற்ற தெற்காசிய நாடுகளுக்கிடையிலான ஜந்தாவது கராத்தே சுற்றுப் போட்டித் தொடரில் 21 வயதுக்குட்பட்ட 67 கிலோ எடைப்பிரிவு ஆண்களுக்கான குமித்தே இறுதிப் போட்டியிலேயே வெண்கலப் பதக்கத்தினை வென்ற ரிசோபன் இலங்கைக்கும் திருக்கோவில் கல்வி வலயத்திற்கும் அக்கரைப்பற்று ஸ்ரீ  இராம கிருஷ்ணா தேசிய பாடசாலைக்கும் ராம் கராத்தே சங்கத்திற்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்திருந்தார்.

இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப் போட்டிகளில் காட்டா பிரிவில் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியிருந்ததுடன், மலேசிய நாட்டில் 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்வதேசப் பாடசாலைகளுக்கிடையிலான காட்டா போட்டிகளில் தங்கப் பதக்கத்தினையும், குமித்தே போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தையும் வென்று முழு இலங்கைத் தேசத்துக்கும் பெருமை சேர்த்திருந்தார்.

அதேபோல் 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற சகல மாகாணங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய மாணவர்களிடையே நடாத்தப்பட்ட அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப் போட்டிகளில் சோதீஸ்வரன் ரிசோபன் வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கத்தினை வென்றெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆலையடிவேம்பு  பிரதேசத்தைச் சேர்ந்த சோதீஸ்வரன் சுந்தரலெட்சுமியின் கனிஷ்ட புதல்வனரான இவர், கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற ராம் கராத்தே சங்கத்தின் ஸ்தாபகரும் பிரதம போதானாசிரியர் மற்றும் பயிற்றுவிப்பாளரும் ஆலையடிவேம்பு பிரதேச செயலக ஒய்வு நிலை பதவிநிலை உதவியாளருமான சிகான் கே. கேந்திரமூர்த்தியின நேரடிப் பயிற்றுவிப்பின் கீழ் பயிற்சி பெற்ற ஒரு வீரர் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

வரவேற்பு நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்த அவர் இலங்கைக்கான பதக்கம் மொன்றை பெற்றுக்கொடுத்தமைக்காக தான் மகிழ்ச்சியடைவதாகவும் தன்னை ஊக்குவித்த பெற்றோருக்கும் இறைவனுக்கும் ராம் கராத்தே சங்கத்தின் பிரதம போதானாசிரியர் உள்ளிட்ட பயிற்றுவிப்பாளர் இலங்கை கராத்தே சம்மேளனம் கல்விச்சமூகம் மற்றும் பண உதவியினை வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.