ஜனாதிபதி தேர்தல் வரலாற்றிலேயே இறுக்கமான போட்டியாக முடிவிற்கு வரும் தேர்தல் பிரசாரங்கள்

 ஆர். சயனொளிபவன் & TEAM
  • சஜித் பிரேமதாச முன்னணியில் உள்ளதாக கருதப்படும் மாவட்டங்கள்
  • கோத்தபாய ராஜபக்ச முன்னணியில் உள்ளதாக கருதப்படும் மாவட்டங்கள்
  • சஜித், கோட்டா   இருவருக்கும் இடையே நெருக்கமான போட்டி நிலவும் மாவட்டங்கள் 
  • சஜித் பிரேமதாச ஒரு பார்வை
  • சஜித்  ஜனாதிபதியானால் இவருடைய ஆட்சியானது
  • சஜித்திற்கு பாதகமாக உள்ள விடயம்கள் என 
  • கோத்தபாயா ராஜபக்ச ஒருபார்வை
  • கோத்தபாய   ஜனாதிபதியானால்   இவருடைய ஆட்சியானது
  • கோத்தபாயவிற்க்கு பாதகமாக உள்ள விடயங்கள் 
ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் பிரசாரங்கள் இன்று  ( நவம்பர் 13ம் திகதி ) நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றது. ஜனாதிபதி தேர்தல் சரித்திரத்திலேயே  மிகவும் இறுக்கமான தேர்தல் பிரசராங்களாக 8வது ஜனாதிபதி தேர்தலே  அமைந்துள்ளது. முன்னணி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச மற்றும்  கோத்தபாயா ராஜபக்ச ஆகிய இருவரும்  தமது  தேர்தல் பிரசாரங்களை காலை அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஆரம்பித்து அதனை  தொடர்ந்து மாத்தறை, காலி,களுத்துறை   மாவட்டங்களில்  சூறாவளி முறையிலான   தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டும் மேலும்     தமது இறுதி பிரசாரங்களை இன்று நள்ளிரவு  கொழும்பை அண்டியுள்ள பகுதிகளிலும்  நடத்தி முடிக்கவுள்ளனர்  . அதேவேளை ஜே.வி.பி யினர்   தமது இறுதி தேர்தல் பிரசாரங்களை  மாத்தறை மாவட்டத்திலும் மற்றும்  இன்று மாலை   கொழும்பிலும்  நடாத்துகின்றனர். 

இரு முன்னணி வேட்பாளர்களிலும் சஜித்   6 வாரங்களுக்கு முன்பு ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பாக போட்டியிடுவதற்குரிய வேட்பாளராக பலத்த இழுபறிக்கு பின்பு நியமிக்கப்பட்டார் அதனை தொடர்ந்து சஜித்      முன்னணி வேட்பாளரான  கோத்தபாய ராஜபக்சா அவர்களுக்கு மிகவும் பின் நிலையில் இருந்து தமது தேர்தல் பிரசாரம்களை ஆரம்பித்து கடந்த மூன்று வாரம்களாக தமக்கும் முன்னணி வேட்பாளரான கோத்தபாயா அவர்களுக்கும்  இடையே  உள்ள மக்கள்  செல்வாக்கின் விகிதத்தை குறைக்க ஆரம்பித்து இன்று அவ் ஆதரவை தமக்கு சாதகமாக உள்ள வகையில் 8வது ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரங்களை  முடிவுக்கு கொண்டுவருகின்றார்.

இத் தேர்தலில் 2ம் நிலை போட்டியாளர்களாக கருதப்படும் ஜேவிபி யின் தலைவர் அனுரா குமார திசாநாயக்க  மற்றும் அவரை தொடர்ந்து  முன்னாள் இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க ஆகிய இரு வேட்பாளர்களும்    தமக்கிடையே 6 இலட்சத்திலிருந்து 8 இலட்சங்கள் வரையிலான வாக்குகளை தம் வசப்படுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னணி வேட்ப்பாளர்கள் இருவருக்கும் இடையே மிகவும் நெருக்கமான போட்டி நிலவுவதனாலும்  மற்றும் இரண்டம் நிலையில் உள்ள இரு வேட்பாளர்களும் கணிசமான அளவு வாக்குகளை  பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்க படுவதனாலும்  இத் தேர்தலில் அதிகூடிய வாக்குகளை பெரும் வேட்பாளர்   50% விகிதமான வாக்குகளை பெறுவார் என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது  . மேலும் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றிலேயே 8வது தேர்தல் இரண்டாம் கட்ட வாக்கு கணிப்புகளுக்கு செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

சஜித் பிரேமதாச முன்னணியில் உள்ளதாக கருதப்படும் மாவட்டங்கள் 

கொழும்பு, கண்டி, நுவரெலியா, யாழ்ப்பாணம் ( கிளிநொச்சி அடங்கலாக ), வன்னி (வவுனியா,மன்னர், முல்லைத்தீவு), திருகோணமலை, மட்டக்களப்பு, திகாமடுல்ல - அம்பாரை 

கோத்தபாய ராஜபக்சா முன்னணியில் உள்ளதாக கருதப்படும் மாவட்டங்கள் 

குருநாகல், அனுராதபுரம், புத்தளம், காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, மொனராகலை  


சஜித், கோத்தா  இருவருக்கும் இடையே நெருக்கமான போட்டி நிலவும் மாவட்டங்கள் 

ஹம்பாக, களுத்துறை, ரத்னபுர, கேகாலை, பதுளை, பொலநறுவை, மாத்தளை


சஜித் பிரேமதாச ஒரு பார்வை 


1967 இல் கொழும்பிலே பிறந்த இவர் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்கே பிரேமதாச அவர்களின் புதல்வருமாவார் .  இவர் தமது ஆரம்ப படிப்பை கொழும்பிலும் பின்னர் தமது மேற்படிப்பை லண்டன் LSE யிலும் மேற்கொண்டிருந்தார். இவருடைய தந்தை ஜனதிபதியாக இருந்த வேளை 1992ஆம் ஆண்டு மே மாதம் 1ம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலில் தமது உயிரை நீத்தார்  .

சஜித்   25 வருடங்களுக்கு முன்பு அரசியலில் பாராளுமன்ற உறுப்பினராக தமது தந்தையின் பூர்வீக  பிரதேசமான திஸ்ஸகாரகமை பகுதி , அம்பாந்தோட்டை மாவட்டத்தை    பிரதிநித்துவப்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினராக தமது அரசியலில் வாழ்க்கையை ஆரம்பித்து பின்னர் படிப்படியாக  பிரதி அமைச்சர், அமைச்சர் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் என வளர்ந்து இன்று ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் என்ற நிலையையும்  அடைந்துள்ளார். அந்த வகையில் சஜித்    நல்ல அரசியல் அனுபவம் உள்ள ஒரு அரசியல் வாதி என்றும் கருதப்படுகின்றார் .

சஜித் அவர்கள் ஜனாதிபதியானால் இவருடைய ஆட்சியானது

  •  ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளிக்கும் தலைவராக இருப்பார்  எனவும் அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அவர்களும் மற்றும் அவர்களது  குழுவினர் அடங்கலான பல ஜனநாயகத்தை மதிக்கும் மற்றும் பாதுகாக்கும் அமைப்புகள் தமது   ஆதரவை  சஜித்க்கு வழங்கி  வருகின்றனர்   .
  • நாட்டின் ஜனநாயகம்,  ஏனைய அரசியல் கட்சிகளின்  எதிர்காலம், ஊடாக சுதந்திரம், மனித உரிமை சட்டங்களை   பாதுகாக்கும் அரசியல் தலைவனாகவும் கருதப்படுகின்றார் 
  •  தமது தந்தை ஜனாதிபதியாக பதவி வகித்து   போர் காலப்பகுதியில் தற்கொலை தாக்குதல் மூலம்  கொல்லப்பட்டதாலும் கணிசமான அளவு சிங்கள மக்களின் நம்பிக்கைக்கும் உரியவராகவும் காணப்படுகின்றார் .
  • இவர் அமைச்சராக இருந்து  கடந்த 5 வருட காலப்பகுதியில் நேர்மையாகவும் , செய்திறனுள்ள முறையிலும் இன மத வேறுபாடு இன்றி நாட்டில் உள்ள சகல பகுதிகளிலும் பல நூறு வீட்டு திட்டங்களை நிறைவு செய்து மேலும் அவ்வாறு பூர்த்தி செய்யப்பட்ட வீடுகளை பாமர மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வுகளுக்கு தாமே சென்று கையளிப்பதையும் மேலும் அவ்வாறு கையளித்ததன் மூலமாக  பல ஆயிரக்கணக்கான பாமர மக்களின் இதயம்களிலிலும் குடிகொண்ட ஒரு பிரபல்யமான அமைச்சராகவும் விளங்குகின்றார் .
  • நாட்டை  இன மத பேதமின்றி முன்னெடுத்து செல்வதில் முழு நம்பிக்கை கொண்டுள்ளதாலும்  அந்தவகையில் நாட்டில் உள்ள மிக மிக கூடுதலான விகிதமான  சிறுபான்மை சமூகம்   இவருடைய ஆட்சியில் நம்பிக்கை கொண்டும் உள்ளது. மேலும்      சிறுபான்மை சமூகத்தை பாரிய அளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  (ரிசார்ட் பதியுதீன் ), தமிழர் முற்போக்கு கூட்டமைப்பு ( அமைச்சர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், ராதாகிருஷ்ணன் ) போன்ற கட்சிகளும் சஜித்தின் வெற்றிக்கு  தமது முழு ஆதரவையும் வழங்கி வருகின்றனர் 
  • இவருடைய தேர்தல் விஞ்ஞாபனம் பெண்களின் நலன்கள், பாதுகாப்பு,  பிரதிநிதித்துவம்  போன்ற பெண்கள் சார்ந்த விடயம்களில் அக்கறை செலுத்துவதனாலும், இளைஞர்கள் யுவதிகளுக்கான தொழில் பேட்டைகள் பிரதேச செயலக பிரிவு அடங்கலாக உருவாக்குதல், தொழில் நுட்ப ஆற்றலை இளையோர்  மட்டத்தில் ஊக்கிவிக்கும் நோக்குடன் மாவட்டரீதியாக தொழில் நுட்பங்க ளை அமைத்தல் போன்ற நம்பிக்கை தரக்கூடிய பல திட்டங்களையும் உள்ளடக்கியுள்ளது . 

                      சஜித்திற்க்கு பாதகமாக உள்ள விடயங்கள்  

  •  உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக முன்னறிவிப்புகள் வெளிவந்தும் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் இருந்த இடர்பாடுகள் காரணமாகவும் மேலும் நல்லிணக்க அரச ஜனாதிபதியின் பொறுப்பற்ற தன்மையாலும் குறித்த தற்கொலை  தாக்குதலை தடுப்பதற்கான முன்னேற்பாடுகள் எடுக்காமை 
  • மேலும் நல்லாட்சியில் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதியிற்கும் இடையேயான முரண்பாடு காரணமாக குறிப்பிடத்தக்க அளவு மக்களுக்கு நன்மைபயக்க கூடிய முறையில் பொருளாதார கொள்கைகளை வகுத்து நடைமுறை படுத்தாமை 
  • உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பிற்கு பின்பு அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் நிவாரணம்கள் வழங்காமை மற்றும் இச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட உல்லாச துறையை கட்டியெழுப்புவதற்கு துரித கதியில் உரிய நடவடிக்கைகள் எடுக்காமை  
  • ரணில் அரசாங்கத்தினால் பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படும் மத்திய வங்கி புனை முறிப்பு மோசடி 
  • பாமர மக்களின் வாழ்வாதாரத்தை  கட்டியெழுப்ப கூடிய முறையில் ஆக்கபூர்வமான திட்டம்களை முன்னெடுக்காமை அந்த வகையில் பாமர மக்கள் மேலும்  பொருளாதார  நெருக்கடிகளுக்குள் தள்ளப்பட்டுள்ளமை  

அந்த வகையில் சஜித்   முடிவெடுக்கும் முழு பொறுப்பில் தற்போது இல்லாவிடிலும் தாம்  அங்கம் வகிக்கும்  அரசாங்கம்  பொறுப்பு கூற  வேண்டிய பொறுப்பில் இருப்பதனால் சஜித்திற்கும் கோத்தபாயாவிற்கும் இடையே நெருக்கமான போட்டியை ஏற்படுத்தியுள்ளது.



சஜித்  சகல இன மக்களையும் நம்பக்கூடிய வகையில் தேர்தல் பிரசாரங்களை  முன்னெடுத்து வருவதனால் ஜனாதிபதி  தேர்தலுக்கான வேட்புமனு வழங்கப்பட நாளில் இருந்து சஜித்தின்  செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளதை நடுநிலையில் உள்ள அனைத்து ஊடகவியலாளர்களும் தெரிவித்துள்ளனர். முக்கியமாக ஐக்கிய தேசிய கட்சியில் அதிருப்தியினால் கடந்த உள்ளுராட்சி தேர்தலில் மாற்று கட்சிகளுக்கு வாக்களித்த பெரும்பான்மை சிங்கள மக்களில் ஒரு தொகுதியினரை சஜித் அவர்களால் மீள தமக்கு ஆதரவு அளிக்க கூடிய தன்மைக்கு மாற்றியுள்ளதாகும் கூறப்படுகின்றது. இரு முன்னணி வேட்பாளர்களோடும் ஒப்பிட்டு பார்க்கும் போது 4 வாரம்களுக்கு முன்பு மிகவும் பின்னிலையில் தமது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்த சஜித்   இன்று இத் தேர்தலில் வெற்றியாளராக வரக்கூடிய நிலைக்கு தம்மை மாற்றியும் உள்ளார்.



கோத்தபாயா ராஜபக்சா ஒருபார்வை 


கோத்தபாய 1949ல் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள பலாத்துவ பகுதியில் 7 சகோதரர்கள் உள்ள ஒரு பிரபல்யமான ஒரு அரசியல் குடும்பத்தில் பிறந்தார், மேலும் 1950களில் இருந்து இவருடைய தந்தை மற்றும் தந்தையின் சகோதரர் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களாகவும் பதவி வகித்தனர். கோத்தபாய தமது 22வது வயதில் அதாவது 1972ல் இராணுவத்தில் சேர்ந்து 1992 வரை பதவி வகித்து. 20 வருடங்கள் இராணுவ சேவையில் பதவி வகித்தவர் என்ற ரீதியில் இராணுவத்தின் பிராந்திய அளவிலான அதிகாரி தரம் வரை பதவி வகித்த வேளையில் ஓய்வையும் பெற்றார்.

இவருடைய ஓய்வை தொடந்து 1992 ல் அமெரிக்க பிரஜாவுரிமை  பெற்று 1992 இலிருந்து 2004 ஆண்டு வரை அமெரிக்காவிலேயே வாழ்ந்தும் வந்தார். பின்னர் அவருடைய சகோதரர்களில் ஒருவரான மஹிந்த ராஜபக்ச  2004ல் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து மீண்டும் இலங்கைக்கு வந்து பாதுகாப்பு செயலாளராகவும் 2004யில் இருந்து 2015ம் ஆண்டு வரையும் பதவியும் வகித்தார்.

ராஜபக்ச குடுப்பதினாரால் உருவாக்கப்பட்ட பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாயா   நிற்பது மட்டுமன்றி அரசியலில் எந்த அனுபவமும்  அற்ற இவர் கடந்த வாரம்  வரையும் இத்  தேர்தலின் முன்னணி வேட்பாளராகவும் கருதப்பட்டார்.

கோத்தபாய   ஜனாதிபதியானால் இவருடைய ஆட்சியானது 

  •  குறிப்பாக கோத்தபாயா அவர்களின்  தேர்தல் பிரசாரம்கள் மற்றும் அவரை ஆதரிக்கும் அவருடைய முன்னணி குழு மற்றும் அவர் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலப்பகுதியானா 2005 -  2015 வரையிலான காலப்பகுதியில் இவர் விடுதலைப்புலிகளுக்கு எதிராக  கொடிய முறையில்  யுத்தத்தை மேற்கொண்டு   2009ல் முடிவிற்கு கொண்டு வந்தமை  பின்னர் நாட்டில் உள்ள முஸ்லீம் சமூகத்திற்கு எதிரான  கடுமையான போக்கு என்பன கோத்தபாய அவர்களை பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையிற்கு உரியவராகவும் மேலும் சிங்கள மக்களில்   பாதுகாவலராகவும் இருப்பார் என்றும் அம்  மக்களினால்   எதிர்பார்க்கப்படுகின்றார் . 
  • நாட்டின் பாதுகாப்புக்கு இவரது ஆட்சியில் முக்கியத்துவம்  கொடுக்கப்படும் என்றும் மேலும் உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் போன்ற தாக்குதல்கள் இடம்பெறாத வகையில் நாட்டை முன்னெடுத்து செல்வார் என்றும் இவரது தரப்பால் தொடர்ந்தும் தெரிவிக்கப்படுகின்றது 
  • இவரது ஆட்சியில் பௌத்த பேரினவாதிகளே பாரிய அளவில்  ஆதிக்கம் செலுத்துவார்கள் என்றும் அந்த வகையில் விமல் வீரவம்ச, உதய கம்மண்பில  பௌத்த துறவிகளாக ஞானதேரர், அத்துரலிய தேரர் போன்றோர்கள் சக்திவாய்ந்த நபர்களாகவும் இருப்பார்கள் என்றும் கருதப்படுகின்றது.
  • இவர் ஒரு கடுமையான நிர்வாகி என்று கருதப்படுவதனால் குறுகிய காலப்பகுதிக்குள் அவர் பல திட்டம்களை வகுத்து மேலும் அத் திட்டம்களை செவ்வனே செய்முறை படுத்துவார் என்றும் எதிர்பார்க்க படுகின்றது 
  • இவருடைய ஆட்சியில் பாமர மக்களுக்கு நன்மை பயப்பிக்க கூடிய பல நல்ல திட்டம்களை நடைமுறைப்படுத்துவரர் என்றும் எதிர் பார்க்கப்படுகின்றது .
              கோத்தபாய அவர்களுக்கு பாதகமாக உள்ள விடயம்கள் 
  •  அரசியல்  எதிர் தரப்பின்னர் இவருடைய தன்மை பற்றி  பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர் அந்தவகையில் 
  1. கோத்தபாயா   நாட்டில் கொடூரமான போர் நடைபெற்ற காலப்பகுதியில் தன்னுடைய முழுமையான சேவைக்கலாம் முடியும் முன்னர் தமது 42 வது  வயதில்லேயே இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றது மட்டு மன்றி நாட்டையும் விட்டு செல்லும் போது  இலங்கை பிரஜா உரிமையை 2004ஆம் ஆண்டு  இரத்துச்  செய்தவர் என்றும்  
  2. 2019ஆம் ஆண்டு வரையும் இவர் அமேரிக்க பிரஜையாகவும் மேலும் இவ் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க உள்ள நிலையிலேயே தமது அமெரிக்க பிரஜாவுரிமையை இரத்து செய்யும் நடவடிக்கையில்  இறங்கினார் என்றும் மேலும் தற்போது இவ் விடயமானது  இவரது அரசியல் எதிராளிகள் இவருக்கு பாதகமான வகையில்  பயன்படுத்த கூடியவகையிலும் அமைந்துள்ளது.  
  3. விடுதலை புலிகளுக்கு எதிராக இவர் நடத்திய போர் காலப்பகுதியில் இடம்பெற்றதாக கருதப்படும் பாரிய போர் மீறல்கள் , காணாமல் ஆக்கப்பட்டமை, ஊடவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள்  என்பன இவரை ஒரு கடும் இராணுவ போக்காளராகவும் காட்டுகின்றது 
  4. 2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து  முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக கட்டவிழ்த்து  விடப்பட்ட வன்முறைகளை கட்டுப்படுத்தாமை பொது பல சேனையின் உருவாக்கம் என்பனவற்றால்  நாட்டில் உள்ள 90% அளவிலான முஸ்லீம் சமூகத்தின் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளார்.  
  5. இவருக்கு எதிராக தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ள  பல வகையான துஸ்பிரயோக வழக்குகள்  
போன்ற விடயம்களால்  கோத்தபாயா அவர்களின் தேர்தல் பிரசாரம்களில் குறிப்பாக கடந்த ஒரு வார காலப்பகுதியில் பெரும் பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளது

  • ராஜபக்ஷக்களினால் உருவாக்கப்பட்ட பொதுஜன பெரமுனை  அவர்களின்  குடும்ப உறுப்பினர்களில் ஒருவரை  ஜனாதிபதி வேட்ப்பாளராக நிறுத்துவதற்கு  உருவாக்கப்பட்ட அரசியல் கட்சி என்றும் மேலும் இத்  தன்மையானது  குடும்ப ஆட்சியிற்கு மீண்டும் ஒரு முறை வழிவகுக்கும் என்றும் 
  • ராஜபக்ஸக்களே நாட்டின் முக்கிய பதவிகளான ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் மற்றும் முக்கிய அமைச்சு பதவிகளை வகிப்பார்கள் என்றும் இவை அரச  முறையிலான ஆட்சி முறைக்கு வழிகோலும் எனவும் 
  • கடந்த ஒரு வார காலமாக  குறிப்பாக கோத்தபாயா அவர்களுக்கு எதிரான  அமெரிக்க பிரஜாவுரிமை, மற்றும்   அமைச்சர் ராஜித செனவரத்னவினால் வெளிக் கொண்டுவரப்பட்ட ஆட்கடத்தல், காணாமல் ஆக்கப்பட்டமை , விடுதலை புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட பெருந்தொகையான தங்கம், அதனை தொடர்ந்து அமைச்சர் சம்பிக்க ரணவக்கவால் கொண்டுவரப்பட்டுள்ள சங்கரில்ல ஹோட்டல் அமைப்பிற்கு காலிமுகத்திடலில் வழங்கப்பட்ட 6 ஏக்கர் அளவிலான நிலப்பரப்பு விற்பனையில் ராஜபக்ஷக்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும்  பெரும்  தொகையான தரகுப் பணம் 
  • ஜனநாயக சுதந்திரம், மனித உரிமை, ஊடக சுதந்திரம் போன்ற இன்றியமையாத மனித விழுமியம்களில்   ராஜபக்சாவினர் வைத்துள்ள நம்பிக்கை 
இவ்வாறு அண்மைய நாட்களாக ராஜபக்ஷக்களுக்கு எதிராக பல்வேறு குற்றசாட்டுகள் முன் வைக்கப்படுவதனால்  கோத்தபாயாவில்    மக்கள் வைத்துள்ள  செல்வாக்கில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது . மேலும் இதன் விளைவே சஜித் கோத்தபாயா ஆகிய இருவருக்குமான போட்டியானது மிகவும் இறுக்கமான நிலைமையை அடைவதற்கான காரணமாகவும் உள்ளது என்றும் கருதப்படுகின்றது 

எமது நாட்டை பொறுத்த அளவில் துல்லியமான முறையில் கணிக்கப்படக்கூடிய கருத்து கணிப்பு முறைகள் இல்லாத வகையில் குறிப்பாக முன்னணி வேட்பாளர்களான சஜித் பிரேமதாசக்கும் கோத்தபாயா ராஜபக்சக்கும் இடையேயான போட்டி மிக நெருக்கமாக உள்ளதாக கருதப்படுவதாலும் மேலும் மூன்றாவது நான்காவது முன்னணி வேட்பாளர்கள் இத் தேர்தலை முதல் முறையாக 2ம் கட்ட வாக்கு கணிப்பிற்கு இட்டுச்செல்வார்கள் என்றும் எதிர் பார்க்கப்படுவதனாலும்.  நாட்டில் ஜனநாயகம் தொடரவேண்டும் ஜனநாயகத்தின் முதுகெலும்பு என கருதப்படும் அரசியல் கட்சிகளின் எதிர்காலம்  நிலைநிறுத்த பட  வேண்டும் என்பதனாலும் மேலும் இன மத வேறுபாடு இன்றி நாடு முன்னோக்கி செல்வதற்கும்   நாட்டின் எதிர்கால சுபீட்சத்தை கருத்தில் கொண்டும்  இத் தேர்தலில்  நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளரும் தமக்குள்ள  தார்மிக பொறுப்பை கருத்திற் கொண்டு பொறுப்புள்ள முறையில் தமது வாக்குரிமையை தவறாது நாட்டிற்கும் நாட்டின் உள்ள அனைத்து மக்களுக்கும் நன்மை பயப்பிக்கக் கூடியவகையில்  பயன்படுத்த  வேண்டும் என்றும் ஜனநாயக வாதிகள் வேண்டி நிற்கின்றனர்   .

 ஆர். சயனொளிபவன் & TEAM