டிசம்பர் 31 மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தல்

வருடந்தோறும் 31ஆம் திகதி நள்ளிரவில் வீதி விபத்துக்களால் அதிகமானோர் உயிரிழப்புக்கள் மற்றும் காயங்களுக்கு உள்ளாகுவதால் வாகன சாரதிகளும் பாதசாரிகளும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அரசாங்க வைத்தியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதேவேளை கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது பட்டாசுகளால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைவடைந்துள்ளதாகவும் குறிப்பாக பெரியவர்களிடத்தே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக தீக்காயங்களுக்கு உள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கை பெரும் வீழ்ச்சி கண்டிருப்பதாகவும் வைத்தியர்கள் சுட்டிக்காட்டினர்.

சுமார் 15 தொடக்கம் 40வயதுக்கு இடைப்பட்டவர்களே 31ஆம் திகதி நள்ளிரவன்று அதிகமான விபத்துக்களை சந்திப்பதாகவும் வைத்தியர்கள் குறிப்பிட்டனர்.

புது வருடத்தை வரவேற்கும் அதேநேரம், 31ஆம் திகதி நள்ளிரவன்று இடம்பெறும் விபத்துக்களை தவிர்த்துக் கொள்வது பற்றிய அறிவுரைகளை வழங்கும் செய்தியாளர் மாநாடு நேற்று சுகாதார கல்விப் பணியகத்தில் நடைபெற்றது.

இதன்போதே வைத்தியர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

அவசர விபத்துக்களை தடுக்கும் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சமித சிறிதுங்க இது தொடர்பில் மேலும் விளக்கமளித்ததாவது-

"31ஆம் திகதி நள்ளிரவன்று அதிகமான களியாட்டங்களில் பங்குபற்றுவதால் நித்திரையின்மை மற்றும் களைப்புடன் வாகனங்களை செலுத்துவதன் காரணமாகவே அதிகமான வாகன விபத்துக்கள் இடம்பெறுகின்றன.



அத்துடன் பொலிஸார் வழங்கும் தகவல்களுக்கமைய மதுபானம் மற்றும் ஏனைய போதைவஸ்துகளை நுகருவதன் காரணமாகவும் அதிகமான சாரதிகள் வாகனங்களை விபத்துக்குள்ளாக்குவதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் அதிக வேகம் மற்றும் வீதி ஒழுங்குவிதிகளை மதிக்காமை என்பனவும் வீதி விபத்துகளுக்கு பிரதான காரணமாகியுள்ளது," என தெரிவித்தார்.

அதேநேம் 31ஆம் திகதி இரவில் வீதியில் செல்லும் பாதசாரிகள் சாரதிகளுக்கு தெரியும் வகையில் கடும் நிறங்களாலான ஆடைகளை அணிந்து செல்வதுடன் வீதிச்சட்டங்களை மதித்து செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் விடுமுறை காலம் ஆகையால் சுற்றுலா செல்வோர் கடல் மற்றும் நீர்நிலைகளில் நீராடும்போது அதிக அவதானத்துடன் செயற்படுமாறும் வைத்தியர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பிறக்கும் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியானதாக அமைவதற்காக விபத்துக்களை தவிர்த்துக்ெகாள்ளும் வகையில் விழிப்புணர்வுடன் செயற்படுமாறும் வைத்தியர்கள் பொதுமக்களை கேட்டுக்ெகாண்டனர்.