பேக்கரி உற்பத்திகளின் விலை ரூ. 5 ஆல் குறைப்பு


பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை உடனடியாக 5 ரூபாவால் குறைக்குமாறு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் நாட்டிலுள்ள அனைத்து பேக்கரி உரிமையாளர்களுக்கும் அறிவித்துள்ளது.

பாரியளவில் வரி வீதத்தை அரசாங்கம் குறைத்துள்ளதால் அதன் பிரதிபலன் மக்களுக்கு சென்று சேரவேண்டு மென்ற அடிப்படையில் இக் கோரிக்கையை பேக்கரி உரிமையாளர் சங்கம் விடுத்துள்ளது.

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஏ.ஆர்.ஜயரத்னவிடம் இது தொடர்பில் வினவிய போது,

புதிய அரசாங்கம், வற் வரி உட்பட பல வரிகளை பாரிய அளவில் குறைத்துள்ளது. இதன் காரணமாக சிறு உற்பத்தியாளர்கள் பாரிய நன்மையடைவர். 17 சதவீதமாக இருந்த வற் வரி 8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், 10 இலட்சம் வருமானம் பெறும் கம்பனிகளுக்கு விதிக்கப்பட்ட வரி நீக்கப்பட்டது. 

இதனால் 90 சதவீதமான பேக்கரி உரிமையாளர்கள் இனி வரி செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது. ஆகவே, இந்த பாரிய வரி சலுகையின் பிரதிபலன் மக்களுக்குச் சென்று சேர வேண்டும். அதற்காகவே, பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி பொருட்களின் விலையை உடனடியாக 5 ரூபாவால் குறைக்குமாறு பேக்கரி உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளோம். 

கோதுமை மாவின் விலை குறைக்கப்படாமல் பாணின் விலையை குறைக்க முடியாது. விலை குறைப்பு தொடர்பில் பேக்கரிகளுக்கு அறிவித்துள்ளோம். ஜனவரி முதலாம் திகதிக்கு முன்னர் அனைவரும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.