டெங்கு நுளம்பு தாக்கத்தால் இலங்கையில் 85000 - கல்முனை பிராந்தியத்தில் 1000 - ஆலையடிவேம்பில் 100 இற்கும் மேற்பட்டவர்களாக அதிகரிப்பு

(வி.சுகிர்தகுமார்)  
டெங்கு நுளம்பு தாக்கத்தால் இலங்கையில் 85000 இற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கல்முனை பிராந்தியத்தில் 1000 பேரும் விசேடமாக ஆலையடிவேம்பில் 100 இற்கும் மேற்பட்டவர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது என கல்முனை பிராந்திய தொற்று நோய் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் என்.ஆரிப் தெரிவித்தார்.


டெங்குவின் தாக்கத்தால் சில நாட்களுக்குள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட பிரிவுகளில் இன்று(14) மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனை நடவடிக்கையினை மேற்பார்வை செய்ய வருகை தந்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் நாட்டிலே பெய்துவரும் அடைமழை காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுபோல் கல்முனை பிராந்தியத்திற்குட்பட்ட பிரிவுகளிலும் அதன் தாக்கம் அதிகரிக்கப்பட்டு வருகின்றது என்றார்.

குறிப்பாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அண்டிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தாக்கம் அதிகரித்து வருவதுடன் விசேடமாக ஆலையடிவேம்பு மற்றும் அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை பொத்துவில் போன்ற சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் டெங்குவின் தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது.

இதே நேரம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தினமும் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக கல்முனை பிராந்தியத்தில் உள்ள அனைத்து மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், நுளம்பு தடுப்புகள்  உதவியாளர்கள் என 80 இற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்களை இணைத்து அவர்களை 30 குழுக்களாக பிரித்து ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இன்று விசேட பரிசோதனை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளோம்.

இதன் மூலம் டெங்கு பரவக்கூடிய இடங்களை அவதானித்து அவற்றை அழிப்பதற்கான ஆலோசனை மற்றும் அறிவறுத்தல்களை மக்களுக்கு வழங்கவுள்ளோம். அதனூடாக விரைவில் ஆலையடிவேம்பில் டெங்கு நோய்த்தாக்கத்தை மக்களின் ஒத்துழைப்புடன் கட்டுப்படுத்துவோம் என்றார். இதற்காக பூரண ஒத்துழைப்பை வழங்கி வரும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.எல்.அலாவுதீன் மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜி.சுகுணன் மற்றும் வாகனம் உள்ளிட்ட வசதியினை வழங்கிய ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கும் நன்றியை தெரிவிப்பதாக கூறினார்.

இதே நேரம் களப்பரிசோதனை பணிகளில் ஈடுபட்ட உத்தியோகத்தர்களுக்கான தெளிவூட்டல் கருத்தரங்கு ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இன்று காலை நடைபெற்றது.

இக் கருத்தரங்கில் உத்தியோகத்தர்கள் மேற்கொள்ளவேண்டிய பரிசோதனைகள் மற்றும் நடவடிக்கை தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
தொடர்ந்து உத்தியோகத்தர்கள் பல இடங்களுக்கும் சென்று பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் பலருக்கு ஆலோசனைகளை வழங்கினர். மிகவும் மோசமான நிலையில் காணப்பட்ட இடங்களின் உரிமையாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை கடிதங்களையும் கொடுத்தனர்.