ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன் அவரது உறுப்புரிமையும் ரத்து


(வி .சுகிர்தகுமார்)
ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன் அவரது உறுப்புரிமையும் ரத்துச்செய்யப்பட்டள்ளதாக ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் இராஜ இராஜேந்திரா தெரிவித்தார்.

ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தற்கால நிலைப்பாடு தொடர்பில் ஆலையடிவேம்பில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதேவேளை தவிசாளர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பிலாக அவரது உறுப்புரிமையை நீக்கும் பொருட்டு சட்டரீதியான முடிவெடுக்கக்கூடிய ஆலையடிவேம்பு பிரதேச சபை தேர்தலில் ஈரோஸ் ஜனநாயக முன்னணி போட்டியிட்ட பங்காளி கட்சியான தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரிக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் கடந்த உள்ளுராட்சி தேர்தலில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியானது ஆலையடிவேம்பு பிரதேச சபைக்காக தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன் 11 உறுப்பினர்களின் உதவியோடு ஆட்சியை கைப்பற்றியது.

இதன் பயனாக எமது கட்சியை சேர்ந்த க.பேரின்பராசா தவிசாளராகவும் தெரிவு செய்யப்பட்டார். இதன் மூலம் பொதுமக்களுக்கு வினைத்திறனான சேவையாற்றுவார் என்பதுடன் கட்சிக்கும் விசுவாசமாக செயற்படுவார் என எதிர்பார்த்தோம். ஆனாலும் அவர் பொதுமக்களுக்கான சிறந்த சேவையினை ஆற்றவில்லை என்பது புத்திஜீவிகள் மற்றும் மக்களின் கருத்துக்கள் மூலம் பெறப்பட்டதுடன் கட்சியின் செயற்பாடுகளுக்கும் ஒத்துழைக்காதவராகவும் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளை முன்னெடுப்பவராகவும் மாறினார். இவ்விடயம் தொடர்பில் பலமுறை அவரை கட்சி அழைத்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டபோதும் அதனையும் அவர் பொருட்படுத்தாது செயற்பட்டார்.

ஆகவே பிரதேச அபிவிருத்தி, மக்களின் நன்மை, கட்சியின் எதிர்காலம் ஆகியவற்றை கருத்திற்கொண்டு கட்சியின் பொதுக்குழு மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச மக்களை ஒன்றுகூட்டி மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் அவரை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்குவதுடன் இனிவரும் காலங்களில் கட்சிக்கும் அவருக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை தெரிவிக்கின்றேன். மேலும் அவர் தொடர்பான செயற்பாட்டிற்கும் கருத்திற்கும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி பொறுப்புக் கூறாது எனவும் குறிப்பிட்டார்.

கட்சியின் இறுதி முடிவாக அவருக்கெதிரான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.
மேலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஈரோஸ் ஜனநாயக முன்னணி உறுப்பிரான இவரை சட்டப்படி இப்பதவியில் இருந்து நீக்கும் பொருட்டு தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம்; ஆனந்தசங்கரி ஐயாவிற்கு கடிதம் மூவம் அறிவித்துள்ளோம். அவரது உறுப்புரிமை தொடர்பில் அக்கட்சி உரிய தீர்மானத்தை எடுக்கும் எனவும் நம்புகின்றோம் என்றார்.