விவசாயிகள் மீதான கடன்கள் உட்பட பல்வேறு கடன்கள், நுண் நிதிக் கடன்களை இரத்து



விவசாயிகள் மீதான கடன்கள் உட்பட பல்வேறு கடன்கள், நுண் நிதிக் கடன்களை இரத்துச் செய்வதற்கு உரிய படிமுறைகள் கையாளப்படும் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க பதவியேற்கையில் கூறினார்.

அபிவிருத்தி வங்கிகள் மற்றும் கடன் திட்டங்களுக்கான இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் தற்போது நாட்டில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான உடனடித் தீர்வுகள் வழங்கப்படும் என்று கூறினார். 

சொத்துக்களையே இழக்கச் செய்யும் அளவிற்குத் தாக்கம் செலுத்துகின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஆரம்பக் கலந்துரையாடல்கள் பிரதம மந்திரி அவர்களது தலைமையில் அரசாங்க மற்றும் தனியார் வங்கிகளுடன் நடைபெற்றன. உரிய வங்கிகளிடமிருந்து பொருத்தமான அறிக்கைகள் கிடைத்ததும், அடுத்த வாரத்தினுள் சலுகை வழங்கப்படும் என அமைச்சர் சுட்டிக் காட்டினார். இன்று (02) காலை தனது கடமைகளை அமைச்சில் பொறுப்பேற்கும்போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு. எஸ். ஆர். ஆட்டிகல அவர்களால் வரவேற்கப்பட்டார். சகல சமய அனுட்டானங்களைத் தொடர்ந்து சுபவேளையில் பிரித் ஓதலுடன் அமைச்சர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கை மக்கள் கூட்டணியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜி. எல் பீரிஸ், இராஜாங்க அமைச்சர்கள் கனக ஹேரத், காஞ்சன விஜேசேகர ஆகியோரும் இவ் வைபவத்தில் கலந்து கொண்டனர்.

பின்னர், இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க ஊடகங்களுக்குப் பின்வருமாறு கூறினார்:

”கடந்த அரசாங்கத்தில் பொருத்தமான செயன்முறைகள் காணப்படவில்லை என்பதை நாம் கண்டோம். அதுவே கடந்த அரசாங்கத்தின் தோல்விக்குரிய பிரதான காரணமாகும். ஆனால், நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கும் தேர்தல் அறிக்கையொன்றைச் சமர்ப்பித்தே நாம் அதிகாரத்திற்கு வந்துள்ளோம். நாம் அதைப் பின்பற்றுவோம். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நாங்கள் எல்லோருமே அடுத்த ஐந்து வருடங்களுள் அத் தேர்தல் அறிக்கையில் கூறியவற்றைச் செயற்படுத்துவோம். இவ்விடயத்தில் சரித்திரத்திலேயே நாம் ஒரு விசேட ஆணையையும் விசேட தலைமைத்துவத்தையும் பெற்றுள்ளோம்.

இலங்கை மத்திய வங்கி, அரச வங்கிகள், தனியார் வங்கிகள் ஆகியவற்றின் தலைமைத்துவங்களுடன் பிரதமரின் தலைமையில் விசேட கலந்துரையாடலை நடாத்தியுள்ளோம். இதன் நோக்கமானது, எதிர்கால முதலீட்டுச் சந்தர்ப்பங்களை உருவாக்குவதற்காக இவ் வங்கிகளின் பொருளாதார நிலைமையை ஆராய்வதாகும். அதன் பிரகாரம் அவர்கள் இவ்வாரத்தினுள் தமது அறிக்கைகளைச் சமர்ப்பிப்பார்கள்.

இன்றிலிருந்து சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களிலிருந்து பெரிய தொழில் முயற்சியாளர்கள் வரை எவ்வாறான சலுகைகளை வழங்க முடியும் என்பது குறித்து நாம் வங்கிகளிடமிருந்து அறிக்கைகளைக் கோரியிருக்கிறோம். கடன் தகவல் பணியகத்தினால் சில வர்த்தகர்கள் கறுப்புப் பட்டியலில் இடப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தமது சொத்துக்களை இழக்கும் அபாயத்திலும் உள்ளனர். ஒரு வாரத்தினுள் வங்கிகளின் அறிக்கைகள் கிடைத்ததும் அவர்களுக்குரிய சலுகைகளை வழங்குவோம்.

2014 தொடக்கம் 2019 வரையான காலப்பகுதியினுள் வரிகள் இரட்டிப்பாக்கப்பட்டன. வரிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட பணம் சமூக முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தப்படவில்லை. ஊழல்கள் காரணமாக அவை வீணாக்கப்பட்டன. முதலாவது நடவடிக்கையாக நாம் வரிகளைக் குறைத்துள்ளோம். இவ்வாறான குறைப்பின் மூலம் ஏற்படும் இழப்பை அரசாங்கச் செலவுகளைக் குறைப்பதன் மூலம் ஈடுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். எல்லாத் தொழில் முயற்சியாளர்களையும் தத்தமது தொழில்களைக் கொண்டு நடாத்துமாறு நாம் அழைக்கிறோம். பல முதலீட்டுச் சந்தர்ப்பங்கள் எமக்கு முன்னால் காத்திருக்கின்றன. உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்கான பல கொள்கைகளை நாம் அறிமுகப் படுத்தியுள்ளோம்.

சில நிதி நிறுவனங்களின் ஊழல்கள் காரணமாகவும், அவை முறிவுற்றதன் காரணமாகவும் அவற்றின் வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமப்படுவதை நாம் அறிவோம். நாட்டின் பொருளாதாரத்தையும் வாடிக்கையாளர்களையும் பாதிக்காத வகையில் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நாம் எதிர்பார்க்கிறோம். தவறிழைத்த நிதி நிறுவனங்களையும் அவற்றின் உரிமையாளர்களையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.

பொருளாதார வளர்ச்சி வீதமானது 2014 இல் 6.8% ஆக இருந்தது. அது 1.6% ஆகக் குறைந்துள்ளது. முதலீட்டாளர்களது ஊக்கம் தடுக்கப்பட்டுள்ளது. நாம் பொருளாதாரத்திற்குப் புத்துயிரளிப்போம். முக்கியமாக, எமது முதலாவது நடவடிக்கை தேசிய பாதுகாப்பு பற்றியதாகும். பொதுமக்களது பாதுகாப்பில் நாம் திருப்தியடைய வேண்டும். பாதுகாப்புப் பிரச்சினைகளுக்குரிய தீர்வுகள் பெறப்பட்ட பின்பே முதலீடுகளுக்குத் தேவையான சூழலை உருவாக்க முடியும். அதன் பி்ன்பே பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். இவற்றுக்குத் தீர்வு காண்பதே எமது அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருக்கும்.

ஜனாதிபதி கோட்டபாய இராஜபக்ஷ தமது தேர்தல் பிரசாரங்களின்போது நுண் நிதிக் கடன்களை இல்லாமலாக்குவதாக ஒரு வாக்குறுதியை வழங்கியுள்ளார். இது எமது தேர்தல் அறிக்கையிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. எனவே, நாம் நுண் நிதிக் கடன்களை இனிமேலும் கையாளப் போவதில்லை. ஆனால், விவசாயிகளுக்கான கடன்கள் உட்பட எல்லா நுண் நிதிக் கடன்களையும் இல்லாமலாக்கப் போகிறோம். நான் முன்னர் கூறிய வங்கி அறிக்கைகள் கிடைத்ததும் இது குறித்து அவசியமான நடவடிக்கைகளை எடுப்போம்”

நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு. எஸ். ஆர். ஆட்டிகல, பிரதிச் செயலாளர்கள், பணிப்பாளர் அதிபதிகள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.