சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட செயற்திட்டங்கள்



சர்வதேச ரீதியில் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ' இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக அணிதிரளும் , இலஞ்ச ஊழலை வெறுக்கும் சமுதாயத்தை உருவாக்கல் ' என்ற தொனிப்பொருளை அடிப்படையாக கொண்டு நாட்டில் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுப்ப்பதற்கு சர்வதேச ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு உத்தேசித்துள்ளது.

மேற்படி செயற்திட்டங்களை வெற்றிகரமாக்குவதற்கு தினமும் மூன்றரை லட்சம் பயணிகள் வந்து செல்லும் கொழும்பு நகரை மையமாக கொண்டு விழிப்பூட்டல் செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஆணைக்குழுவும், புகையிரத சேவைகள் திணைக்களமும் ஒன்றிணைந்துள்ளன.

இந்த தேசிய செயற்பாட்டு திட்டம் இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான ஒரு முக்கிய பொறி முறையாக தயாரிக்கப்பட்டுள்ளதுடன் , பொதுச் சேவையின் பணிகளை முற்றிலும் புதியதான முறைமைகளின் அறிமுகத்துடன் நேர்மையான சேவையாக மாற்றுவதற்கான பல முன்மொழிவுகளை உள்ளடக்கியதாக அமையப்பெற்றுள்ளது. அத்தோடு பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் வகையிலான பல்வேறு தடுப்பு நிவாரண நடவடிக்கைகளையும் உள்ளடக்கியதாகவும் காணப்படுகின்றது.