தாய்நாட்டின் பாதுகாவலனாக ஜனாதிபதி மக்களின் அன்பினை பெற்றுள்ளார்



நாட்டுக்கு எதிரான அனைத்து சவால்களையும் வெற்றிகொண்டு, தாய் நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்யக்கூடிய தலைவராக மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மக்களின் அன்பினை பெற்றுள்ளார் என வித்தியாலங்கார பிரிவெனாதிபதி கொழும்பு, சிலாபம் பகுதிகளின் பிரதான சங்கநாயக்கர், களனி பல்கலைக்கழக வேந்தர் கலாநிதி வண.வெலமிட்டியாவே குசலதம்ம தேரர் தெரிவித்தார்.


நேற்று (07) பிற்பகல் களனி வித்தியாலங்கார விகாரைக்கு வருகைத் தந்த ஜனாதிபதி அவர்கள், அங்கு சமய வழிபாடுகளில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள், வண.வெலமிட்டியாவே குசலதம்ம தேரர் மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் வண. கும்புருகமுவே வஜிர தேரர் ஆகியோரை தரிசித்து ஆசிர்வாதம் பெற்றார்.

ஆன்மீக புனிதத் தலமான வித்தியாலங்கார வணக்கஸ்தலத்திற்கு ஜனாதிபதி வருகை தந்தமையை கௌரவமாக கருதுவதாக குசலதம்ம தேரர் தெரிவித்ததோடு, வருகை தந்திருந்த மகாசங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதி உள்ளிட்டோருக்கு ஆசிர்வாதம் வழங்கினர். இதன் பின்னர் வரலாற்று சிறப்புமிக்க களனி ரஜமகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள், அங்கு சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டார்.

விகாராதிபதி வண. கொள்ளுபிட்டியே மஹிந்த சங்கரக்கித தேரர் மற்றும் வண. பெங்கமுவே நாலக தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் இதன்போது பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதி அவர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கினர். ஜனாதிபதியின் எதிர்கால செயற்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு மகாசங்கத்தினரின் ஆசிர்வாதம் என்றும் கிடைக்கப்பெறுமென வண. மஹிந்த சங்கரக்கித தேரர் தனது ஆசியுரையின்போது தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.