சடலம் ஒன்று வேளாண்மை வெட்டும் இயந்திரம் அருகே எரிந்த நிலையில் மீட்பு

(கிருசாயிதன் )
திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பிலுவில்-02 பகுதியில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நெல் அறுவடை இயந்திரம் இனந்தெரியாதோரால் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளதுடன், அவ் இயந்திரத்தின் கீழ்ப் பாகத்தில் இனந்தெரியாத ஆணின் சடலமொன்றும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தம்பிலுவில் -02, தம்பிமுத்து வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நெல் அறுவடை இயந்திரம் அப்பகுதியில் வசிக்கும் மயில்வாகனம் ஜெயராசா என்பவருக்கு சொந்தமானதாகும். இன்று (12) அதிகாலை 12.30 மணியளவில் குறித்த தீச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த பதினொரு மாதங்களுக்கு முன்னர் புதிதாக கொள்வனவு செய்த இந்நெல் அறுவடை இயந்திரம் சிறிது காலமே பயன்படுத்தப்பட்டதாகவும் குறித்த தீச்சம்பவம் இடம்பெற்றபோது இவ்வீட்டில் எவரும் இருக்கவில்லை என தெரிவிக்கும் வீட்டின் உரிமையாளர் தமக்கு சொந்தமான வீடொன்றில் தாம் வசித்து வருவதாகவும் கடந்த பல வருடங்கள் தொட்டு குறித்த தீச்சம்பவம் இடம்பெற்ற வீட்டில் இரவு வேளைகளில் எவரும் இருப்பதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

இத்தீச்சம்பவத்தின் மூலம் நெல் அறுவடை இயந்திரம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், வீட்டில் இருந்த பெறுமதி மிக்க பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளன.

தீயில் எரிந்துள்ள இந் நெல் அறுவடை இயந்திரத்தின் அடிப்பாகத்தில் தீயில் எரிந்த நிலையில் காணப்பட்ட சடலத்தினை அம்பாறை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி துசித ஹப்புஹாமி சம்பவ இடத்திற்கு சமூகமளித்து அடையாளப்படுத்தியதையடுத்து, அங்கு விஜயம் செய்த அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான பி.சிவகுமார் சடலத்தினை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பணித்ததனைத் தொடர்ந்து சடலம் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

குறித்த சம்பவ இடத்திற்கு  அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் அம்பாறை தடயவியல் பொலிஸார் மற்றும் திருக்கோவில் பொலிஸார் ஆகியோர் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.