அரசியல் பழிவாங்கல் அடிப்படையிலான அரசின் செயற்பாடுகள் -ரணில்


சட்டத்திற்கு மதிப்பளிக்கும் நாட்டை உருவாக்குவதாக உறுதியளித்து ஆட்சிபீடமேறியவர்களால் தற்போது முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளைப் பார்க்கும் போது, அரசியல் நோக்கங்களை முதன்மைப்படுத்தி சட்டம், நேர்மை மற்றும் சம்பிரதாயங்கள் ஆகியவை புறக்கணிக்கப்படுவதாகவே தோன்றுகிறது.

இத்தகைய செயற்பாடுகள் கடும் கண்டனத்திற்கும், விசனத்திற்கும் உரியவை என்று ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறி கைது செய்யப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவித்து ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார்.

அவ்வறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனநாயக மரபுகள் மற்றும் சம்பிரதாயங்களுக்கு முரணாகவே சம்பிக்க ரணவக்கவின் கைது இடம்பெற்றிருக்கிறது என்பது தற்போது தெளிவாகியிருக்கிறது. அது மாத்திரமன்றி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கைது செய்யும் போது பின்பற்றப்பட வேண்டிய சம்பிரதாயங்கள் மீறப்பட்டிருக்கின்றன. சபாநாயகருக்கு அறிவிக்கப்படாமலேயே இக் கைது இடம்பெற்றிருக்கிறது.

ஏற்கனவே நடைபெற்று முடிந்த வழக்கு ஒன்று தொடர்பாகவே சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் அவ்வாறு செய்வதற்கான நியாயமான காரணங்களை எதனையும் பொலிஸார் தற்போதுவரை வெளிப்படுத்தவில்லை.

எமது கடந்த ஆட்சிக்காலத்தில் நீதிமன்றம், பொலிஸ், அரச கட்டமைப்புக்கள் உள்ளிட்ட அரச சேவைகள் அனைத்தும் எவ்வகையிலும் அரசியல் மயப்படுத்தப்படாமல் சுயாதீனமாகச் செயற்படுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டோம்.

ஆனால் சட்டத்திற்கு மதிப்பளிக்கும் நாட்டை உருவாக்குவதாக உறுதியளித்து ஆட்சிபீடமேறியவர்களால் தற்போது முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளைப் பார்க்கும் போது, அரசியல் நோக்கங்களை முதன்மைப்படுத்தி சட்டம், நேர்மை மற்றும் சம்பிரதாயங்கள் ஆகியவை புறக்கணிக்கப்படுவதாகவே தோன்றுகிறது.

இது தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி கடும் கண்டனத்தையும், விசனத்தையும் வெளியிடுகிறது.