பணம் கடன் வழங்கல் நடவடிக்கைகளின் மீதான பொதுமக்களின் விழிப்புணர்வு



அச்சு, இலத்திரனியல் மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் உட்பட பல்வேறுபட்ட வழிமுறைகளினூடாக கடன் வழங்கல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவருகின்ற விளம்பரங்கள் மற்றும் தொடர்பூட்டல் வடிவங்கள் பற்றி இலங்கை மத்திய வங்கி அவதானித்திருக்கிறது.

இது தொடர்பாக குறிப்பிட்ட ஒழுங்கீனங்கள் தொடர்பில் முறைப்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன. சில குற்றச்சாட்டுக்கள் கடன் வழங்குநர் தொடர்பான மோசடிகள் தொடர்பானவையாகக் காணப்படுகின்ற வேளையில், சில உயர் வட்டி வீதங்கள் தொடர்பான முறைப்பாடுகளாகவும், வாடிக்கையாளர்களுக்கான தொந்தரவு தொடர்பானவையாகவும் மற்றும் வாடிக்கையாளர் தகவல் தொடர்பான இரகசியத்தன்மைகளை தவறாகப் பயன்படுத்துகின்றமை தொடர்பாகவும் காணப்படுகின்றன.

பணம் கடன் வழங்குமொருவர் என்பது, பிணையுடனோ அல்லது பிணையின்றியோ வட்டியின் பொருட்டு ஏதேனுமொரு வழியில் கடனை வழங்குமொருவராக அல்லது அவராகவே கடனினை வழங்குகின்ற விதத்தில் விளம்பரங்களை மேற்கொள்ளுகின்ற அல்லது அறிவித்தல்களை மேற்கொள்ளுகின்ற அல்லது தன்னைத்தானே அவ்வாறு நிலைநிறுத்திக் கொள்கின்ற ஒருவர் என விபரிக்க முடியும்.

தற்போது காணப்படுகின்ற சட்டக் கட்டமைப்பின்படி பணம் கடன் வழங்குவோர் வைப்புக்களை ஏற்றுக்கொண்டாலொழிய, உரிமம் வழங்கல் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பொன்றின் கீழ் உள்ளடக்கப்படமாட்டார்கள். ஆகவே இலங்கை மத்திய வங்கி நிதி அமைச்சுடன் சேர்ந்து பணம் கடன் வழங்குநர்களுக்கு உரிமம் வழங்கல், ஒழுங்கு முறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வை செய்தல் மற்றும் வாடிக்கையாளர்களைப் பாதுகாத்தல் என்பனவற்றின் பொருட்டு சட்டம் ஒன்றினை வரைவதற்கு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.

இக் குறிப்பிட்ட சட்டமானது தற்பொழுது வரைபுச் செய்முறையின் கீழ் இருப்பதுடன் அண்மிய எதிர்காலத்தில் சட்டமாக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.