டெங்கு நுளம்பு ஒழிப்புக்கு வொல் பெக்கியா (Wolbachia)



டெங்கு நுளம்பை ஒழிப்பதற்காக வொல் பெக்கியா (Wolbachia )என்ற பெயரில் புதிய பக்ரீரியா ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த பக்ரீரியா அவுஸ்ரேலியாவில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. பல வருட காலமாக இரசாயன கூட பரிசோதனை மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளில் பரீட்சாத்தமாக முன்னெடுக்கப்பட்ட பின்னர் இந்த பக்ரீரியா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் நுகேகொட மற்றும் கொழும்பை கேந்திரமாக கொண்டு இந்த பக்ரீரியாவை பயன்படுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.

உலக மக்கள் தொகையில் 40 சதவீதமானோர் டெங்கு நோயால் பாதிப்புக்கு உள்ளாவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இலங்கையில் முதலாவது டெங்கு நோயாளர் 1962 ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்டார். 1956 ஆம் ஆண்டு தொடக்கம் 1968 காலப்பகுதியில் இருந்து இலங்கை முதன்முறையாக டெங்கு நோயை எதிர் கொண்டது. இந்த நோய் மிக மோசமான நோயாக 1989 ஆம் ஆண்டில் காணப்பட்டது.

இந்த வருடத்தில் டிசம்பர் மாதம் வரையிலான 4 மாத காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 797 ஆகும். உலகில் பெரும்பாலான நாடுகள் எதிர் நோக்கும் மிக கொடூரமான இந்த நோய்க்காக வொல் பெக்கியா (Wolbachia) என்ற பக்ரீரியாவை அறிமுகப்படுத்துவது காலத்தின் தேவையாகும் என்று நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது