மட்டக்களப்பு மாவட்டத்தில் 750 பேர் டெங்கினால் பாதிப்பு!

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றமையால் அதனை கட்டுப்படத்தும் வகையில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலங்கள் பல்வேறு வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுகளில் டெங்கை கட்டுப்படுத்தும் நோக்கில் புகை விசிறும் வேலைத் திட்டம் இடம்பெற்று வருகின்றது.

சுகாதார வைத்திய அதிகாரி எல்லைக்குட்பட்ட பகுதியில் டெங்கை கட்டுப்படுத்தும் நோக்கில்; வீடு வீடாக புகை விசிறி, டெங்கை கட்டுப்படுத்தல் தொடர்பில் விளக்கங்களையும் வழங்கி வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 750 பேர் டெங்கு நோயாளர்களான இனங்காணப்பட்டுள்ளனர். அதில் அதிகமாக மண்முனை வடக்கு பகுதியில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் 225 நபரும், குறைவாக வாகரை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளதுடனும், களுவாஞ்சிக்குடி பகுதியில் ஒருவர் உயிரழந்துள்ளதாகவும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிபனையில் டெங்கு கட்டுப்பாடு பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வே.குணராஜசேகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மக்கள் சற்று விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கி கிடக்கின்ற குப்பைகள், நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்பரவாக வைத்து கொள்ளுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிபனையில் டெங்கு கட்டுப்பாடு பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வே.குணராஜசேகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.