ஈரான் – அமெரிக்கா மோதலின் உச்சம் : பயணப்பாதையினை மாற்றியது ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ்!


ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையில் அதிகரித்துள்ள போர் பதற்றம் காரணமாக பயணப்பாதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தினால் இன்று(புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – லண்டன் – கொழும்பு வான்வெளி பயணப்பாதையிலேயே இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்காவின் அல் ஆசாத் விமானப்படைத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

அடுத்தடுத்து ஒன்பது தடவைகளுக்கு மேல் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், இத்தாக்குதலை அமெரிக்காவின் தலைமையகமான பென்டகன் உறுதிசெய்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின்படி, அண்மையில் பாக்தாத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஈரானின் முக்கிய தளபதி காசெம் சுலேமானீ கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இந்தநிலையிலேயே பயணப்பாதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.