சட்டவிரோத மணல் ஏற்றி ஆறு உழவு இயந்திரம், இருபது சந்தேக நபர் கைது!


(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
வாழைச்சேனை வட்டார வன அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பயடுத்து கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட ஆறு உழவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இருபது சந்தேக நபர்களும் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தனிகாசலம் தெரிவித்தார்.

வாழைச்சேனை வன திணைக்களத்திற்கு சொந்தமான குடும்பிமலை காட்டுப்பகுதில் உள்ள மாதுறு ஓயா ஆற்றிலும் மற்றும் கிலச்சிமடு பிரதேசங்களிலும் மண் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஓட்டமாவடி, வாழைச்சேனை, பொத்தானை பகுதியை சேர்ந்த ஆறு உழவு இயந்திரங்களும் வட்டார வன உத்தியோகத்தர்கள் மற்றும் வாழைச்சேனை விஷேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பில் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இருபது சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தனிகாசலம் தெரிவித்தார்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், அதனை தடுப்பதற்கு தனது தலைமையில் வட்டார வன உத்தியோகத்தர்களும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் வட்டார வன உத்தியோகத்தர் மேலும் தெரிவித்தார்.

இவ் விஷேட நடவடிக்கையின் போது மட்டக்களப்பு மாவட்ட வன உத்தியோகத்தர் பிரனித் சுரவீர, மாவட்ட மேலதிக வன அதிகாரி எம்.ஏ.ஜாயா உட்பட வன அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.