ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்!-மாவட்ட அமைப்பாளர் எஸ்.எம்.அறூஸ்!


(நூருல் ஹுதா உமர்)
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தீர்மானத்திற்கும், கொள்கைகளுக்கும் எதிராக செயற்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஏறாவூர் நகர சபை மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.எம்.அறூஸ் தெரிவித்தார்.

ஏறாவூரில் நேற்று (24) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது, பொது ஜன பெரமுன கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு, எழுத்து மூலமான ஒப்பந்தங்களைச் செய்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து, அவரது வெற்றிக்காக உழைத்தது. குறிப்பாக தேர்தல் காலப்பகுதியில் எமது கட்சி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக தீவிரமாக பிரச்சாரங்களையும் மேற்கொண்டது. அந்த வகையில் இந்தப் பிராந்தியத்தில் நாம் பிரச்சாரங்களை மேற்கொண்ட போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது.

குறிப்பாக, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினுடைய மக்கள் பிரதிநிதிகள் சிலர், கட்சியினுடைய தீர்மானத்திற்கு மாற்றமாக செயற்பட்டு, கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட மாற்றுக் கட்சியினரை ஆதரித்து அவர்களின் வெற்றிக்காகவும் உழைத்தனர். இந்தவிடயம் கட்சியின் தீர்மானத்தினை புறக்கனிக்கும் ஒரு செயற்பாடாகவே பார்க்கப்பட்டது.

கோட்டாபய ராஜபக்ஷ இந்த நாட்டு மக்களுடைய பேராதரவுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என்பதனை நாம் இந்தப்பிராந்தியத்திலே எடுத்துக்கூறி பிரச்சாரங்களை மேற்கொண்ட போது, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினுடைய ஏறாவூர் நகர சபை மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் எமது பிரச்சாரங்களுக்கு எதிராகவும், கட்சியினுடைய தீர்மானங்களுக்கு எதிராகவும் செயற்பட்டனர். 

குறித்த உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகளின் பின்னர் கைசேதப்பட்டனர்.
ஜனாதிபதி தேர்தலில் குறித்த உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் ஏன் இவ்வாறு செயற்பட்டார்கள் என பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் நாம் கட்சியின் கவத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சினுடைய தீர்மானத்திற்கும், கொள்கைகளுக்கும் எதிராக செயற்பட்ட கட்சியினுடைய உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கட்சியின் செயற்குழு தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு, எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நாம் கட்சியினுடைய மட்டக்களப்பு மாவட்ட தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.சுபையிர் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அதற்கான ஆதாரங்களையும் வழங்கியுள்ளோம். குறித்த விடயத்தினை கட்சியினுடைய தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன மற்றும் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர உட்பட செயற்குழுவின் கவனத்திற்கும் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கொண்டு சென்றுள்ளார்.

எனவே, வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்கும், கட்சிக்கும் துரோகமிழைத்தவர்களுக்கு எதிராக விரைவில் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அதில் எவ்விதமான மாற்றுக் கருத்துமில்லை. கட்சிக்கு துரோகமிழைத்துவிட்டு, பதவிகளை பாதுகாத்துக்கொள்வதற்கு கட்சிக்கு பின்னால் அலைந்து திரிபவர்களை கட்சி ஒருபோதும் கண்டுகொள்ளாது எனவும் அவர் தெரிவித்தார்.