பகிடிவதையினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீண்டும் பட்டப்படிப்பை தொடர ஏற்பாடு

பகிடிவதை காரணமாக பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய மாணவர்களுக்கு மீண்டும் பல்கலைக்கழக வாய்ப்பை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்காக திருத்த சட்ட மூலம் ஒன்று கொண்டுவரப்படும் என்று உயர் கல்வி அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்கான செய்தியாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற இந்த சந்திப்பின் போது அமைச்சர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் பகிடிவதையை பொறுத்துக்கொள்ள முடியாமல் பல்கலைக்கழக கல்வியை பெற முடியாமலும் பகிடிவதைக்குள்ளாகி பட்டத்தை பெறமுடியாமல் போனவர்களுக்கு இதற்கான சந்தர்ப்பத்தை இதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பாக அடுத்த வாரத்தில் பத்திரிகை அறிவிப்பு ஒன்று வெளியிடப்படும் என்று தெரிவித்த அமைச்சர் பகிடிவதையின் தன்மை, பல்கலைக்கழக வசதியை பெற்றுக்கொள்ள தயாரான பட்டப்படிப்பு கற்கை நெறி தொடர்பான தகவல்களை இதற்காக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

சமர்ப்பிக்கப்படும் தகவல்களின் உண்மை தன்மை பரிசோதிக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர் இந்த குழுவில் துணை வேந்தர்கள்;, விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் இடம்பெறுவர். நீதியான விசாரணைக்கு பின்னர் தான் விரும்பும் பல்கலைக்கழகத்துக்கு பிரவேசித்து பட்டத்தை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் இந்த மாணவர்களுக்கு கிடைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பகிடிவதையை எதிர்கொள்ள முடியாமல் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறிய மாணவர்கள் சுமார் 2000 பேர் இருப்பதாகவும் உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.