கல்முனை மாநகரசபையின் புதிய உறுப்பினர்களாக வ.சந்திரன் மற்றும் விஜயலெட்சுமி பதவிபிரமாணம்!

(பாறுக் ஷிஹான்)
கல்முனை மாநகரசபையின் புதிய உறுப்பினர்களாக வ.சந்திரன் மற்றும் விஜயலெட்சுமி ஆகியோர் பதவிபிரமாணம் செய்து கொண்டனர்.

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் முன்னிலையில் புதன்கிழமை (22) மாலை 4.30 மணியளவில் குறித்த பதவிப்பிரமாணம் இடம்பெற்றது.

கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் பதவி வகித்த காத்தமுத்து கணேஷ் மற்றும் உறுப்பினர் சுமித்ரா ஜெகதீசன் இருவரும் மாநகர சபையின் உறுப்பினர் பதவியிலிருந்து அண்மையில் நீக்கப்பட்டிருந்தனர்.

இதற்கமைய புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கமைய அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி கல்முனை மாநகர சபையின் உறுப்பினராக வடிவேல்கரசு சந்திரன் மற்றும் கு.விஜயலெட்சுமி ஆகியோர் நியமிக்கபடுவதாக அறிவித்தார்.

கடந்த 2018 பெப்ரவரி மாதம் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஒரு ஆசனத்தை வெற்றி பெற்றிருந்ததுடன் மேலதிக ஆசனங்கள் இரண்டிற்கும் அதன் சார்பில் போட்டியிட்ட காத்தமுத்து கணேஷ் மற்றும் உறுப்பினர் சுமித்ரா ஜெகதீசன் ஆகிய இருவரும் அக்கட்சியினால் மேலதிக பட்டியல் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.

இதில் மேலதிக ஆசனங்களுக்காக நியமிக்கபட்ட காத்தமுத்து கணேஸ் (பிரதிமுதல்வர்)  மற்றும் சுமித்திரா ஆகியோரை தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சி மாநகரசபை உறுப்பினர் பதவி மற்றும் கட்சியில் இருந்தும் நீக்குவதாக அறிவித்திருந்தனர். 

இவர்களுள் காத்தமுத்து கணேஷ் சபையினால் பிரதி மேயராக தெரிவு செய்யப்பட்டு பதவி வகித்து வந்தார். தற்போது இவர் மாநகர சபை உறுப்புரிமையை இழந்திருப்பதனால் கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் பதவியும் வெற்றிடமாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன்டிப்படையில் அதே கட்சியில் போட்டியிட்ட வ.சந்திரன் மற்றும் கு.விஜயலெட்சுமி ஆகியோரை கல்முனை மாநகரசபை உறுப்பினர்களாக கட்சி சார்பாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.