பெரியகல்லாறு சூரியா விளையாட்டுக் கழகத்தின் பாரம்பரிய விளையாட்டு விழா!


(ரவிப்ரியா)
பெரியகல்லாறு சூரியா விளையாட்டுக் கழகம் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு; தமிழர் பாரம்பரிய பண்பாட்டு கலை கலாசார விளையாட்டு விழாவை ஞாயிறன்று (19) பிற்பகல் பெரியகல்லாறு மத்தியகல்லூரி விளையாட்டு மைதானத்தில் ரி.பிரதாஸ் தலைமையில் மாட்டுவண்டி பவனியுடன் பண்பாட்டு கலாசாரங்களை பிரதிபலித்து அதிதிகளை வரவேற்று அழைத்து வந்து, நேர்த்தியாக நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தது.

பிரதம விருந்தினராக மட்டு அரசாங்க அதிபர் எம். உதயகுமாரும். விசேட அதிதிகளாக பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினமும், தென்கிழக்கு பல்கலைக் கழக உயிரியல்துறை தலைவரும் சிரேஸ்ட விரிவரையாளருமான கலாநிதி திருமதி சுஜாறஜனி வரதராஜனும் கலந்து கொண்டனர். 

கௌரவ அதிதிகளாக பிரதேசசபை உறுப்பினர்களான எஸ்.கணேசநாதன். எஸ்.குகநாதன் ஆகியோரும் சிறப்பு அதிதியாக விளையாட்டு உத்தியோகஸ்தர் வி.அனுஷகுமாரும, அழைப்ப அதிதிகளாக ஆலய தலைவர், மற்றும் குருமாரும் பாடசாலை அதிபர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு இடம்பெற்ற பாரம்பரிய விளையாட்டுக்களான வழுக்குமரம் ஏறுதல், குறிப்பாக இளைஞர்களுக்கு மிகுந்த சவாலாக அமைந்த வட்டக்கல் தூக்குதல், தலையணை சமர் கயிறிழுத்தல். எலியோட்டம். தேங்காய் துருவுதல் போன்ற பாரம்பரிய போட்டிகளும் நடைபெற்றன, அத்துடன் சிறுவர். சிறுமிகளுக்கான வித்தியாசமான விவேகமான போட்டிகளும் மெதுவாக கைக்கிளைச் செலுத்துதல் விறுவிறுப்பாக நடைபெற்றது.

.இயற்கை அலங்காரம் இதயங்களை தொட்டு நிற்க, சுத்தமான கடற்காற்று விருட்சங்களை ஊடுருவி வந்து உடல் தாலாட்ட. கதிரவனும் கருணை கொண்டு சூடு தணிக்க, நல்லதொரு இயற்கைச் சூழலில் விழா களை கட்டியது.

அலங்காரங்கள் அனைத்தும், வரவேற்பு வளைவு, விழா மேடை உட்பட தென்னங்கீற்றுக்களால் கலைநயத்துடன் செய்யப்பட்டிருந்தது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

சிக்கனத்துடன் செய்யப்பட்ட இந்த அலங்காரங்கள் சூழலை மாசுபடுத்தாத பசுமையான முன்மாதிரியான அலங்காரங்களாக பண்டைய அருகி வரும் எமது இயற்கை குருத்தோலை அலங்காரங்களை நினைவுபடுத்தியது. அதன் அவசியத்தையம் உணர்த்தியது.

அதிதிகள் உரை வரிசையில் கலாநிதி திருமதி சுஜாறஜனி இவ்வாண்டு 30 மாணவர்கள் இந்தக் கிராமத்திலிருந்து பல்கலைக்கழக பிரவேசம் செய்ய இருப்பதை பெருமையாகக் குறிப்பிட்டார். 

விளையாட்டுக்களும் ஒருவகையில் ஒரு சிறப்பான கலைதான் என்று குறிப்பிட்டார். அதை வளர்த்தெடுப்பதில் இத்தகைய கழகங்கள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

அடுத்து பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா தனதுரையில்  “கல்வியாறு” என சிறப்பு பெயர் கொண்ட இக் கிராமத்தின் கல்வி, வீரம் என்பவற்றை மீண்டும் பறைசாற்றும் ஒரு நிகழ்வாக தான் இதைக் கண்ணுற்றதாகத் தெரிவித்தார். இங்குள்ள விளையாட்டுக் கழகங்கள் சமூகம் சார்ந்து செயற்படுவது பெருமை தரும் விடயமாகும் என்று குறிப்பிட்டார்.

பிரதம அதிதியும் அரசாங்க அதிபருமான உதயகுமார் தனதுரையில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு பொங்கல் தினங்களில் வெகு சிறப்பாக நடைபெற்று தமிழர் தம் வீரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும். அத்தகைய நிகழ்விற்கு ஒப்பான எமது பண்பாட்டு வீரத்துடன் விவேகமும் நிறைந்த விளையாட்டுக்களை நேரில் கண்டு களித்த உணர்வை நான் இங்கு பெற்றேன்.

இளைஞர்களுக்கு மிகுந்த சவலாக அமைந்த மாப்பிள்ளை கல் (வட்டக்கல்) தூக்கும் போட்டிக்கு ஆரம்பத்தில் குறைந்தளவ இளைஞர்கள் முயற்சித்தபோதும், பின்னர் நூற்றக்கணக்கான இளைஞர்கள் சலிக்காமல் முயற்சித்தது இங்குள்ள இளைஞர்களின் பலத்தை நிரூபிக்கவே செய்தது.

வழுக்குமரம் ஏறுதலில் புறக் காரணிகள் சவாலாக அமைந்தபோதும் தளராத அவர்களின் முயற்சி பாராட்டும்படி இருந்தது. அதில் அவர்கள் வெற்றிபெறவே செய்தார்கள். இதேபோல் எமது பாரம்பரிய விளையாட்டுக்களில கிளித்தட்டு. போன்று பல ரகம் .

இளைஞர் சமூகம் எங்கே சென்று கொண்டிருக்கின்றது என்ற ஒரு ஏக்கம் சமூகத்தில் காணப்படுகின்றது. ஆனால் கழக அங்கத்தவர்கள் அனைவருமே கலாசார உடையணிந்து ஓவ்வொருவரும் தலைமைக்கு கட்டுப்பட்டு தங்களின் பொறுப்புக்களை உணர்ந்து சரியாகச் செய்து, தொய்வின்றி மிக நேர்த்தியாக இந்த விளையாட்டுப் போட்டிகளை செவ்வனே நடாத்தி முடித்திருப்பது இளைஞர்கள் குறித்து நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது. மகிழ்ச்சியைத் தோற்றுவித்துள்ளது.

தமிழர் பாரம்பரியங்கள் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது என்பதை இந்த விளையாட்டு நிகழ்வுகள் பறைசாற்றுகின்றன. எனவே இந்தக் கிரமம் தனது செல்லப் பெயருக்கு ஏற்ப எமது பண்பாடு காப்பதிலும். கல்வியிலும் வீர விளையாட்டுக்களிலும் தனித்துவமாக பிரகாசிக்கின்றது என்று  குறிப்பிட்டார்.

வெற்றி பெற்ற வீர வீராங்களைகளுக்கு அதிதிகளால் பரிசுகள் வழங்கி வைக்கப்படடன. தமிழர் பாரம்பரிய பண்பாட்டு கலை நலாசார விளையாட்டு விழா என்ற தலைப்பின் கீழ் நடைபெறும் நிகழ்வுகளில் பொருத்தமற்ற இடைச் செருகல் நிகழ்வுகளால் நிகழ்வின் தரம் குறையும் என்பதை ஏற்பாட்டுக் குழுவினர் ஏற்றுக் கொள்வார்கள் என நாம் கருதுகின்றோம்.