சாய்ந்தமருது நகரின் ஊடாக குறுக்கறுத்துச் செல்லும் தோணாவின் மேல் திண்ம கழிவு கொட்டும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு!


( அஸ்ஹர் இப்றாஹிம்)
சாய்ந்தமருது நகரின் ஊடாக குறுக்கறுத்துச் செல்லும் தோணாவின் மேல் காணப்படும் ஆஸ்பத்திரி வீதி பாலத்திற்கு அருகில் பல வருடங்களாக இடம்பெற்றுவரும் திண்ம கழிவு கொட்டும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் இன்று ஓர் விடிவு காலம் பிறந்துள்ளது.

சாய்ந்தமருது வைத்தியசாலை வீதி பாலம் பல வருடங்களாக குப்பைகள் கொட்டப்பட்டு அசிங்கப்படுத்தப்பட்டு வருவதைத் தொடர்ந்து, அவ்விடத்தை பொது மக்களின் பங்களிப்புடன் ,சாய்ந்தமருது மார்ஸல் இளைஞர் கழக இளைஞர்கள் அழகுபடுத்தும் வேலைத்திட்டம் கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது சுயேட்சைக் குழு உறுப்பினர் எம். வை. எம். ஜஃபர் தலைமையில்ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாலத்தின் அருகாமையில் காணப்பட்ட குப்பைகள் அகற்றப்பட்டு மின் கம்பங்களில் LED மின்குமிழ்கள் பொருத்த்தப்பட்டு மணல் இட்டு நிரப்பி, இருக்கைகள் அமைக்கும் வேலைத்திட்டமும் இதனுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர மேயர் சட்டத்தரணி ஏ. எம். ரக்கீப் கலந்துகொண்டு இப்பிரதேசத்தில் பொருத்துவதற்கான LED மின் குமிழ்களை வழங்கி வைத்தார்.

கல்முனை மாநகர சபையின் சுயேட்சைக் குழு உறுப்பினர்களான ஓய்வுபெற்ற நில அளவையாளர் எம். ஏ. ரபீக், ஆசிரியர் எம். ஐ. ஏ. அஸீஸ் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.