வெளிநாட்டு முதலீடுகளை கவரும் வகையில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கான Free trade Zone முதலீட்டு திட்டம் அறிமுகம்!


சர்வதேச பல்கலைக்கழக கிளைகள் ஊடாக வெளிநாடுகளில் உள்ள இலங்கை வதிவிடத்தைக் கொள்ளாத மாணவர்களைக் கவர்வதற்காக Free trade Zone என்ற உயர் கல்விக்கான முதலீட்டு திட்டம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அமைச்சரவை இணைப்போச்சாளரும் உயர் கல்வி அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவிக்கையில் Free trade Zone என்பதன் கீழ் சர்வதேச பல்கலைக்கழக கிளைகளை அமைத்து இலங்கை சர்வதேச கல்வி கேந்திரமாக முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதற்காக அரசாங்கம் உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்யும் என்று தெரிவித்த அமைச்சர் இதன் ஊடாக இந்த கிளைகளை அமைப்பதற்கு அரசாங்கம் அழைப்பு விடுக்கும் என்றும் தெரிவித்தார். மலேசியாவில் அந்நாட்டு பிரதமர் Mahathir Bin Mohamad முன்னெடுத்ததைப் போன்று Putrajaya Educational city என்ற ஒன்றை அமைப்பது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

மலேசியாவில் மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் பெருமளவு முதலீடுகள் அந் நாட்டுக்கு கிடைத்தகாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். வருடம் தோறும் சுமார் 21 ஆயிரம் மாணவர்கள் உயர் கல்விக்காக வெளிநாடு செல்கின்றனர். இதனால் 50 பில்லியன் ரூபா வருடந்தோறும் வெளிநாட்டு நாணயமாக செலவிடப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது இலங்கை நாணயத்தின் மீது பெரும் தாக்கத்தை எற்படுத்துவதினால் வாழ்க்கைச் செலவும் அதிகரிப்பதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.