தொழிலாக நடத்தி செல்லாமல் எந்தவொரு பெண்ணும் விபச்சாரத்தில் ஈடுபடுவது இலங்கை சட்டத்தில் தவறு இல்லை என உத்தரவு !

தொழிலாக நடத்தி செல்லாமல் எந்தவொரு பெண்ணும் விபச்சாரத்தில் ஈடுபடுவது இலங்கை சட்டத்தில் தவறு இல்லையென கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இச்செய்தி தொடர்பில் மேலும் தெரிவிக்கப் படுவதாவது ....

பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் தாய்லாந்து நாட்டு பெண் கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்கவினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஒரு நபர், வர்த்தக நடவடிக்கையாக பெண்களை விபச்சார தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்தால் மாத்திரம் குற்றம் சுமத்த முடியும். அவ்வாறின்றி முழுமையாக அல்லது மேலதிகமாக விபச்சார தொழிலில் ஈடுபட்டு தங்கள் வாழ்க்கை நடத்தி செல்லும் பெண்கள் இருப்பின் அவர்களுக்கு எதிரான இலங்கை சட்டத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியாதென நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் பழைய வழக்கு தீர்ப்புகள் இரண்டினை உதாரணமாக சுட்டிக்காட்டிய நீதவான், விபச்சார விடுதியை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் மாத்திரம் வழக்கு தாக்கல் செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதியில் பணியாற்றியதாக கூறப்படும் பெண் உட்பட குழுவினர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக் கொளள்ப்பட்டது.

இதன்போது தாய்லாந்து நாட்டு பெண் நிரபராதி என அறிவிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். எனினும் அவர் விபச்சார விடுதியை முகாமைத்துவம் செய்தார் என குற்றச்சாட்டிற்கான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜுன் மாதம் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.