அம்பாறை மாவட்டத்தில் பாடசாலை சிற்றூண்டிச்சாலைகள், மருத்துவ ஆய்வு கூடங்கள் திடீர் சுற்றிவளைப்பு !

அம்பாறை மாவட்டத்தில், தனியார் மருத்துவ ஆய்வு கூடங்களில் நேற்று (24) மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, பாவனைக்குதவாத, காலவதியான மருத்துவ உபகரணங்களை வைத்திருந்த ஆய்வுகூட உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்டப் பொறுப்பதிகாரி என்.எம். சப்றாஸ் தெரிவித்தார்.

பொதுமக்களால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, நுகர்வோர் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திடீர் சுற்றிவளைப்பின் போது, கலாவதியான மருத்துவ உபகரணங்களை பாவனைக்காக வைத்திருந்த 06 மருத்துவ ஆய்வுகூடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அவற்றின் உரிமையாளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நீதவான் நீதிமன்றங்களில் மார்ச் மாதம் முதலாம் வாரத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். எதிர்காலத்தில் தனியார் மருத்துவ ஆய்வுகூடங்களில் மேலும் திடீர் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், கூறினார்.

அத்துடன் பாடசாலை சிற்றூண்டிச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின் போது காலவதியான மற்றும் கட்டுப்பாட்டு விலையை மீறி கூடுதல் விலைக்கு உணவுப் பண்டங்களை விற்பனை செய்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கெதிராக நீதவான் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், மாவட்டப் பொறுப்பதிகாரி என்.எம். சப்றாஸ் மேலும் தெரிவித்தார்.