மண்டூர் ஸ்ரீ ஆத்மஞான பீடத்தில் இடம்பெறவுள்ள மகா சிவராத்திரி பூஜையும் மகா யாகமும் !!

சிவபெருமானே ஊழி முதல்வன். அவர் தனது கடைக்கண் பார்வையால் உலகில் இருக்கும் அனைத்து ஜீவன்களுக்கும் படியளக்கிறார். அவரது தாண்டவத்தினாலேயே உலகம் நிலை பெற்றிருக்கிறது என்று பல புராணங்களும் வேதங்களும் கூறுகின்றன. அப்படிப்பட்ட ஈசனை, அடியார்க்கும் எளியவன் என்று புகழப்படுபவரைத் துதிக்க மிகச் சிறந்த நாள் என்று ஸ்கந்த புராணம், காமிக புராணம் போன்ற புராணங்களோடு தேவாரமும் போற்றிப் புகழ்வது சிவராத்திரியினையே.
மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாளையே `மகா சிவராத்திரியாகப் போற்றிக் கொண்டாடுகிறோம். ‘ராத்திரி’ என்ற சொல்லுக்கு அனைத்தும் செயலற்று ஒடுங்குதல் என்று பொருள். அதாவது, உயிர்கள் செயலற்று ஈசன் நினைவாக ஒடுங்கும் காலமே சிவராத்திரி.

எதிர்வரும் மாசி மாதம் 21.02.2020 வெள்ளிக்கிழமை அன்று மகா சிவராத்திரி தினமாகும். மகா சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மண்டூர் பாலமுனை ஸ்ரீ ஆத்ம ஞான பீடத்தில் சித்தர் மகா யோகி ஸ்ரீ சற்குரு புண்ணியரெத்தினம் சுவாமிகள் தலைமையில் நான்கு சாமப் பூசை நிகழ்வுகள், பாதபூசை, மகாயாகம், பஜனை, அன்னதானம், ஆன்மீக அருளுபதேசம் என்பன இடம்பெறவுள்ளன.

சிவராத்திரி தினப் பூசை நிகழ்வுகள் எதிர்வரும் 21.02.2020 வெள்ளிக்கிழமை பிற்பகல் 5.00 மனியளவில் ஆரம்பமாகும். உலகை வழிநடத்தும் பதினெட்டு சித்தர்களுக்கும் 18 நிறைகுடங்கள் வைக்கப்பட்டு, பக்தர்களினால் காயத்ரி மகா மந்திரம், மகா மிருத்யுஞ்ஜெய மந்திரம் முதலான சிவ மந்திரங்கள் ஜெபிக்க காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகளின் திருப்பாதங்களுக்கு பாதபூசையுடன், இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட சக்திவாய்ந்த 108 உயிர் மூலிகைகள் கொண்டு மகாயாகமும் இடம்பெறும்.

அதனைதொடர்ந்து இரவு முழுவதும் காயத்திரி மந்திரம், மகா மிருத்தியுஞ்ஜெய மந்திரம், சிவ மந்திரம் முதலான சக்திமிகு மந்திர பாராயணங்களுடன் இரவு 9.00 மணிக்கு 2ம் சாமப் பூசையும், நள்ளிரவு 12.00 மணியளவில் 3ம் சாமப் பூசையும், பஜனை நிகழ்வுகளும் இடம்பெறும்.

அதனைத் தொடர்ந்து அதிகாலை 3.00 மணியளவில், பிரம்ம முகூர்த்தத்தில், பகவான் காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகளின் திருப்பாதங்களுக்கு பக்தர்கள் அவர்களது கரங்களினாலேயே வில்வம் இலை சமர்ப்பணத்துடன் நான்காம் சாமப் பூசை இடம்பெறும். அதனைத் தொடர்ந்து காலை அன்னதானத்துடன் பூசை நிகழ்வுகள் முற்றும்.
இந் நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்கள் முக்கண் முதல்வனாகிய சிவபிரானின் அருட் சக்தியினையும், ஆதி சக்தியான காயத்ரி தேவியின் அருளினையும், குருவருளினையும் மிகவும் ஆத்மார்த்தமாக உணரும் பாக்கியத்தினை பெறுவீர்கள் என்பதில் ஐயமில்லை.