சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு மாத்திரைகள் அன்பளிப்பு !


(அஸ்ஹர் இப்றாஹிம்)
இருதய நோயாளர்கள் உட்கொள்வது உட்பட வலி நிவாரணியாகப் பயன்படுத்தப்படும் அஸ்பிரின் மாத்திரைகளுக்கு தற்போது நிலவும் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் , சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையிலும் குறித்த மாத்திரைகளின் அவசியம் உணரப்பட்டதை கருத்திற்கொண்டு வைத்தியசாலை பொறுப்பதிகாரி விடுத்த வேண்டுகோளையடுத்து நலன்விரும்பி ஒருவரினூடாக சுமார் 21,500 அஸ்ரின் மாத்திரைகளை அபிவிருத்திச் சங்கம் பெற்றுக் கொடுத்துள்ளது.

மேற்படி மாத்திரைகள் சம்பந்தப்பட்ட திணைக்களங்களினால் போதியளவில் இருப்புகள் பேணப்படாமை காரணமாகவே வைத்தியசாலைகளில் தட்டுப்பாடு நிலவுவதுடன் இவற்றை தனியார் மருந்தகங்களில் பணச் செலவு செய்து வாங்குவதிலும் நோயாளிகள் பல சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.

இதனடிப்படையில், குவைத்தில் பணிபுரியும் சாய்ந்தமருதைச் சேர்ந்த ஏ.ஆர்.எம்.ஜபருள்ளாஹ் என்பவரை அபிவிருத்திச் சங்கம் அணுகி மேற்படி மாத்திரைகளைப் பெற்று அவற்றை இன்று (2020.02.11) வைத்தியசாலைக்கு வைத்தியசாலை அபிவிருத்தி சங்கம் அன்பளிப்புச் செய்தது.

மேற்படி மாத்திரைகளை சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எல்.எம்.மிஹ்ளார் அவர்களிடம், தனவந்தர் ஜபருள்ளாஹ், அபிவிருத்திச் சங்க செயலாளர் எம்.ஐ.எம்.சதாத், பொருலாளர் ஏ.எல்.எம்.நியாஸ் மற்றும் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் எம்.ஐ.சாஹிர் ஹுஸைன் ஆகியோர் இணைந்து கையளித்தனர்.

இதே மாத்திரைக்கு கடந்த மாதத்திலும் தட்டுப்பாடு நிலவியதையடுத்து, கடந்த மாதமும் 4500 மாத்திரைகளை வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம் பெற்றுக் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நோயாளிகளின் நலன் கருதியும், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையினூடாக சிறப்பான சேவை வழங்கப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலும் மாத்திரைகளை தக்க தருணத்தில் வழங்கி வைத்த ஜபருள்ளாஹ் அவர்களுக்கு வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.