கிழக்கில் பெரும்போக நெல் அறுவடை நிறைவு கட்டம் !

(பாறுக் ஷிஹான்)
அம்பாறை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது பெரும்போக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டு காணப்படுகின்றது.
அந்த வகையில் நிந்தவூர் ,சம்மாந்துறை ,நாவிதன்வெளி, சவளக்கடை ,13 ஆம் கொலனி ,மத்தியமுகாம், சொறிகல்முனை ,மல்வத்தை, உஹன ,அக்கரைப்பற்று ,அட்டாளைச்சேனை, கோமாரி ,தம்பிலுவில் , உள்ளிட்ட பல விவசாய பகுதிகளில் சிறுபோக நெல் அறுவடையினை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர் .

அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளம் மற்றும் குளங்கள் திறக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதுடன், நோய் தாக்கத்திலும் பாதிக்கப்பட்டு மிஞ்சியுள்ள நெல்களை விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். ஆனால் வெள்ளம் மற்றும் நோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு மிஞ்சிய வேளான்மையை அறுவடை செய்து நெல்லினை விற்பனை செய்வதில் நெல் கொள்வனவாளர்கள் குறைந்த விலையில் நெல்லினை கொள்வனவு செய்து வருவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பெரும்போக நெல் அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால் நெல் விற்பனையில் விவசாயிகள் எதிர்நோக்கும் விலைப் பிரச்சனைக்கு தீர்வுகாணும் முகமாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைவாக ஜனாதிபதியின் செயலாளர் பி.பீஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய மாவட்ட மட்டத்தில் நெற் சந்தைப்படுத்தும் சபையினூடாக நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இம்முறை அம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஹக்டெயரில் நெற்கள் பயிரிடப்பட்டுள்ளதாகவும், இவ்விளை நிலங்களில் இருந்து அதிகளவான அறுவடைகளை விவசாயிகள் எதிர்பார்த்துள்ளதாகவும், அதிகளவான நெற்கள் கொள்வனவு செய்யும் போது திருகோணமலை, வெலிகந்தை, பொலநறுவை போன்ற பகுதிகளிலுள்ள நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு சொந்தமான களஞ்சிய சாலைகளில் களஞ்சியப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.