மட்டக்களப்பில் முதலாவதாக வின்சன்ட் தேசிய பாடசாலையில் சிறுவர் சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் SCDM திறந்து வைப்பு !


மாணவர்களிடையே சேமிப்பினை ஊக்குவிக்கும் வகையில் மக்கள் வங்கியினால் பாடசாலைகளில் பண வைப்பு தன்னியக்க இயந்திரங்களை பாடசாலைகளில் அமைக்கும் செயல்திட்டமானது கல்வி அமைச்சின் அனுமதியுடன் நாடு பூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இச்செயற்பாடுகளில் ஒரு அங்கமாக மட்டக்களப்பு நகர கிளையின் ஏற்பாட்டில் மட் / வின்சன்ட் உயர்தர பெண்கள் பாடசாலையில் பாடசாலை பண வைப்பு தன்னியக்க இயந்திரமானது அமைக்கப்பட்டு 2020.02.10ம் திகதியன்று பாடசாலை மாணவர்களின் பாவனைக்காக கோலாகலமான முறையில் பாடசாலை அதிபர் திருமதி H.சுபாகரன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

மாணவர்களின் பாவனைக்கு உகந்தவண்ணம் எளிய செயல்முறைகளைக்கொண்ட நவீன தொழில்நுட்பங்களுடன் அமைந்த தன்னியக்க வைப்பு இயந்திரத்தினை மட்டக்களப்பின் முன்னனி பாடசாலை ஒன்றில் நிறுவுவதில் மக்கள் வங்கி பெருமை கொள்வதாகவும் இதனை மாணவர்களின் சேமிப்பு பழக்கத்தினை ஊக்குவிக்கும் வகையில் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் எனவும் வங்கி அதிகாரிகள் இந்நிகழ்வில் தெரிவித்தனர். மற்றும் மட்/வின்சன்ட் உயர்தர பெண்கள் பாடசாலையின் கொண்டாட்டகரமான 200வது ஆண்டு நிறைவு வருடத்தில் இந்நிகழ்வும் ஓர் அங்கமாக அமைந்திருப்பது இன்னுமோர் சிறப்பம்சமாகும்.
இந்நிகழ்வில் AUA.அன்சார் மக்கள் வங்கியின் உதவி முகாமையாளர், N.சிறிகாந்தா மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.