கொரோனா நோயாளி ஒருவர் தும்மும் போது 27 அடி தூரம் வரை காற்றில் வைரஸ் பரவும்


கொரோனா வைரஸ் பாதித்த ஒருவர் தும்மும் போது அவரது மூக்கில் இருந்து வெளியாகும் நீர்த் துளிகள் 27 அடி வரை வைரஸ் உடன் காற்றில் பாய்ந்து செல்லும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளார்கள்.

கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க சமூக இடைவெளிதான் மிக முக்கியமானது என்று மருத்துவர்கள் கண்டிப்பாக மக்களை அறிவுறுத்தி வருகின்றனர். மக்கள் சமூக விலகலை கடைப்பிடித்தால் இந்த வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க முடியும் என்பதுதான் மருத்துவ விஞ்ஞானிகளின் உறுதியான முடிவாக இப்போதைக்கு இருக்கின்றது.

இது தொடர்பாக அமெரிக்காவின் 'மசாசூசெட்ஸ்' என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் லிடியா பவுரவுபியா என்பவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை 'ஜேர்னல் ஒப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன்' என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ஆய்வு தவறானது என்றும், மக்களை தவறாக வழி நடத்தும் என்றும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தும்மல் இருக்கும் என்று கூற முடியாது என்றும் அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் தடுப்பு நிறுவனத்தின் இயக்குனர் டொக்டர் அந்தோனி பாசி என்பவர் தெரிவித்துள்ளார்.