தேர்தலை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஜனாதிபதி இருந்தமையே இந்நிலைக்கு காரணம் – சுமந்திரன்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எப்படியாவது தேர்தலை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தமையினாலேயே நாம் இந்த நிலைக்கு முகம் கொடுத்திருக்கின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

டெய்லி மிரர் பத்திரிக்கைக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அதில் அவர் கூறிய சிறிய பகுதியை நாம் மொழிபெயர்ப்பு செய்துள்ளோம்.

அவர் மேலும் பதிலளிக்கையில், “மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் இதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் நாம் இந்த நிலைக்கு முகம் கொடுத்திருக்க மாட்டோம்.

நாடாளுமன்றத் தேர்தல்களை எப்படியாவது நடத்த வேண்டும் என்பதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நோக்கமாக இருந்தது. மார்ச் நடுப்பகுதியில் சார்க் தலைவர்களுக்கு இடையே நடைபெற்ற மாநாட்டில் அவர் இதைப் பிரதிபலித்தார். இதன் காரணமாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி தடுமாறினார்.

அவர் நாடாளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானியை ரத்து செய்திருந்தால் இன்னும் சிறப்பாக கூறினால் அவர் நாடாளுமன்றத்தை கலைக்கவில்லை என்றால் நாடாளுமன்றத்தை கூட்டி பல சட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவந்திருக்க முடியும்.

இருப்பினும் தற்போது அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைக்கு பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும். குறிப்பாக அவர்களின் நடவடிக்கை எங்களுக்கு திருப்திகரமாக இருந்தது. உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன, தினசரி ஊதியம் பெறுபவர்களின் நலன் கவனிக்கப்படுகிறது.

தேர்தல்களை ஒத்திவைக்க நாங்கள் அழைப்பு விடுத்த நேரத்தில், தற்போதுள்ள நிலைமை காரணமாக சிறிது காலம் தேர்தலை நடத்த முடியாது என்பது தெளிவாக இருந்தது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சமூகத்திற்கிடையிலான் இடைவெளி முக்கியமாகும். இதனை கடைபிடித்தால் எந்த தேர்தலையும் நடத்த முடியாது.

மேலும் இந்த வகையான சவால்களை நாம் அனைவரும் ஒன்றாகச் சந்திக்க வேண்டும், அதை ஒரு நபருக்கோ அல்லது அவரது கூட்டாளிகளுடனோ சமாளிக்க விடக்கூடாது. ஜனநாயக ஆட்சி என்பது இதுவே, எனவேதான் நாம் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என கோருகின்றோம்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் பல மாதங்களுக்கு நீடிக்கும், இல்லாவிட்டால் ஒரு வருடம் அல்லது இரண்டு. இத்தகைய சூழலில், இந்த சவாலை எதிர்கொள்ள அரசாங்கத்தின் அனைத்து தரப்பும் திறம்பட செயல்படுவது முற்றிலும் அவசியம்.” என கூறினார்.