'நிர்ணய விலைக்கு மேல் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உடன் அழையுங்கள்' - அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன்

(வி.சுகிர்தகுமார்)  
நிர்ணய விலைக்கு மேல் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் நுகர்வோர் அதிகார சபை உத்தியோகத்தர்களையோ அல்லது அளவைகள் நிறுவைகள் திணைக்கள அதிகாரிகளையோ அல்லது மாவட்ட செயலக அதிகாரிகளையோ உடன் அழையுங்கள் என தெரிவித்த அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் அவர்களது தொலைபேசி இலக்கத்தினையும் வழங்கினார்.

அம்பாரை மாவட்டத்தின் நிலைவரம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் மாவட்ட மட்ட கொரோனா தடுப்பு செயலணி மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தலைமையில் சிறப்பாக செயற்பட்டு வருகின்றது. இதன் மூலம் அரசினால் வழங்கப்படும் அனைத்து விதமான நன்மைகளையும் மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது என்றார்.

மக்களுக்கு தேவையான அனைத்து விதமான அத்தியாவசியப் பொருட்களையும் சுகாதார சேவைகளையும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையினை மாவட்ட செயலகம் மேற்கொண்டுள்ளது எனவும் கூறினார்.

மேலும் மாவட்ட செயலகத்தில் விலை பொருட்களின் விலை நிர்ணய குழுவொன்று உருவாக்கப்பட்டு அதனூடாக நுகர்வோரும் விற்பனையாளர்களும் பாதிக்கப்படாத வகையில் பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை பிரதேச செயலாளர்களும் பொலிசாரும் கண்காணிப்பதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதேநேரம் நடமாடும் சேவையினூடாக பொருட்களை விற்பனை செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து விற்பனை நிலையங்களும் பொருட்களின் விலையினை காட்சிப்படுத்த வேண்டியது கட்டாயமானதாகும்.

இச்சந்தர்ப்பத்தில் விலைகள் தொடர்பாக மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் முறைப்பாடுகளை தமது பிரதேச செயலாளருக்கோ அல்லது நுகர்வோர் அதிகார சபையின் அம்பாரை மாவட்ட பொறுப்பதிகாரியின் தொலைபேசி இலக்கமான 0773794980 எனும் இலக்கத்திற்கோ அல்லது அளவைகள் நிறுவைகள் திணைக்கள பொறுப்பதிகாரியின் தொலைபேசி இலக்கமான 0714402252 இலக்கத்திற்கோ அல்லது மாவட்ட செயலகத்தின் பொது இலக்கத்திற்கோ அழைத்து முறைப்பாடுகளை பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.

அவ்வாறு முறைப்பாடுகள் கிடைக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.