கர்ப்பிணி தாய்மார்களுக்கு உதவிய புனித மிக்கல் கல்லூரியின் பழைய மாணவர்கள்

(ந.குகதர்சன்) 
மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியின் 2006ம் ஆண்டு உயர்தர பழைய மாணவர்களினால் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் முன்று பிள்ளைகளுக்கு அதிகமாக கொண்ட 60 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதியும் முருங்கை கன்றும் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குடும்பிமலை, கூழாவடி, கோராவெளி, பூலாக்காடு, வடமுனை மற்றும் வாகனேரி பிரதேசங்களை சேர்ந்த தினக்கூலி வேலைக்கு சென்று வருமானம் பெற்று வந்த குடும்பத்தினர் மற்றும் கொரோனா தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாட்டினால் வருமானம் இழந்துள்ளவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

அதில் அரிசி, சீனி, பருப்பு, கோதுமை மா, தேயிலை, கருவாடு, வெங்காயம், உப்பு, சவர்காரம் அடங்கலாக ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதியும், முருங்கை கன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது சுகாதார வைத்திய அதிகாரியான டாக்டர்.டி.எம்.சஞ்ஜீவினால் கொரோனா நோயின் ஆபத்து, அறிகுறிகள் மற்றும் அவ்தொற்றில் இருந்தது நம்மை பாதுகாக்கும் வழிகளை தெளிவுபடுத்தியதோடு, வீணாக வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என மக்களுக்கு இறுக்கமான கோரிக்கையை முன்வைத்ததுடன், இவ்நோய் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லும் படியும் தெளிவுட்டினார்.

அத்தோடு 2006ம் ஆண்டு புனித மிக்கல் கல்லூரி மாணவர்கள் சார்பாக வீட்டுத் தோட்டத்தின் பயன்கள், செயல்முறை சம்மந்தமான அறிவுரைகளையும் சேமிப்பின் அவசியத்தையும் புரிந்து கொள்ளும் விதத்தில் தெளிவுபடுத்தியதோடு இனிவரும் காலங்களில் வாழ்க்கை செலவை குறைத்து ஆரோக்கியமான தன் நிறைவான வாழ்க்கையை வாழவேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.