பிரித்தானியாவில் கொரோனாவால் ஒரே நாளில் 621 பேர் உயிரிழப்பு !

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் நேற்று பிற்பகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொற்று குறித்த பரிசோதனையில் நேர்மறையான முடிவுகள் கிடைக்கப் பெற்றிருந்த நிலையில் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வந்தார்.

இந்த நிலையில், உடல் வெப்ப நிலை உள்ளிட்ட கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தொடர்ச்சியாக தென்பட்ட நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனின் வைத்தியரின் ஆலோசனையின் பேரில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்தும் பிரதமராக செயற்படுவார் என பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இன்று காலை இடம்பெற உள்ள கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்துக்கு வெளியுறவுச் செயலாளர் தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதில் தேசிய சுகாதார சேவை ஊழியர்கள் மேற்கொண்டுள்ள கடின உழைப்புக்கு பிரித்தானிய பிரதமர் நன்றி தெரிவித்துள்ளதுடன், அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நிலையில், பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 47 ஆயிரத்து 806 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4 ஆயிரத்து 934 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், நேற்று மாத்திரம் 5 ஆயிரத்து 903 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன், 621 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.