30 வருடங்களாக மூடப்பட்டுக்கிடக்கும் கஞ்சிகுடிச்சாறு கணேசா வித்தியாலத்திற்கு கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் விஜயம்!

(காரைதீவு நிருபர் சகா)
யுத்தம் காரணமாக கடந்த 30வருடங்களாக மூடப்பட்டுக்கிடக்கும் கஞ்சிகுடிச்சாறு கணேசா வித்தியாலயத்தை கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு பார்வையிட்டார்.


அவருடன் திருக்கோவில் வலயக்கல்விப்பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரனும் விஜயம் செய்திருந்தார். பாடசாலைக்கட்டடத்தை சுற்றிப்பார்த்த மாகாணகல்விப்பணிப்பாளர் மன்சூர் இப்பாடசாலையின் வரலாறு மற்றும் இன்றையநிலை தொடர்பாக வலயக்கல்விப்பணிப்பாளர் ஜெயச்சந்திரனிடம் கேட்டறிந்தார்.

அவர்கூறியதன்பிரகாரம் பின்வரும் விபரம் தெரியவந்தது.

குறித்த கஞ்சிகுடிச்சாறு கணேசா வித்தியாலயம் அம்பாறை மாவட்டத்திலுள்ள திருக்கோவில் வலயத்துள் அமைந்துள்ளது.
அக்கரைப்பற்று பொத்துவில் நெடுஞ்சாலையிலிருந்து மேற்காக சுமார் 12கிலோமீற்றர் தொலைவில் மிகவும் பின்தங்கிய பிரதேசத்தில் தங்கவேலாயுதபுரத்திற்கு அடுத்ததாகக்காணப்படுவது கஞ்சிகுடிச்சாறு. ஒருகாலத்தில் விடுதலைப்புலிகளின் பிரதான இயங்குதளமாகப்பயன்பட்டது.

அங்கு தமிழ்மக்கள் காலாகாலமாக வாழ்ந்துவருகையில் 1990களில் ஏற்பட்ட பயங்கரயுத்த சூழ்நிலை காரணமாக இம்மக்கள் முற்றாக உடுத்தஉடுப்புடன் இடம்பெயரநேரிட்டது.

பின்பு 2004.05.12இல் தமது நிலபுலன்களைப் பார்க்கச்சென்றவர்கள் தற்காலிகமாக குடியேறினர். அக்காலகட்டத்தில் குறிப்பாக 2005.09.12இல் இப்பாடசாலைக்கென நிரந்தர இரண்டுமாடிக்கட்டடம் அமைத்துக்கொடுக்கப்பட்டது.பிள்ளைகளும் ஆர்வத்தோடு கற்கத்தொடங்கினர்.

எனினும் மீண்டும் வன்முறை காரணமாக அதே தமிழ்மக்கள் 2006.09.05இல் முற்றாக இடம்பெயரநேரிட்டது. அன்று இம்பெயர்ந்த அவர்கள் நேராக திருக்கோவில் வினாயகபுரம் பிரதேசத்தில் குடியேறி வாழத்தலைப்பட்டனர்.

ஆதலால் முதலில் கள்ளியந்தீவு பாடசாலையிலும் பின்னர் 2016.11.20இல் வினாயகபுரப்பகுதியில் மேற்படி பாடசாலையை தற்காலிகமாக அமைக்கநேரிட்டது. அன்றிலிருந்து இன்றுவரை அந்த மக்களது பிள்ளைகள் அதேபெயரில் இயங்கும் பாடசாலையில் பயின்றுவருகின்றனர்.

இந்தநிலையில் அவர்கள் பூர்வீகமாகவாழ்ந்த கஞ்சிகுடிச்சாற்றில் இன்னும் முறைப்படி மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை.எனினும் சேனைப்பயிர்ச்செய்கைக்காக மட்டும் அம்மக்கள் பகுதியளவில் அங்குசென்றுவருகின்றனர்.
அதனால் பாடசாலை இயங்கமுடியாத நிலை நிலவுவது தெரியவந்தது.

'மீள்குடியேற்றம் முறைப்படி இடம்பெற்றால் அதனை இந்த இடத்தில் இயங்கவைக்கமுடியும்' என பணிப்பாளர் மன்சூர் தெரிவித்தார்.

மேலும் அருகிலுள்ள தங்கவேலாயுதபுரம் வித்தியாலயம் மற்றும் வினாயகபுரத்திலியங்கும் கஞ்சிகுடிச்சாறு கணேசா வித்தியாலயத்தையும் பணிப்பாளர் மன்சூர் நேரடியாகச்சென்று பார்வையிட்டார்.

கிழக்கு மாகாணக்கல்விப்பணிப்பாளர் ஒருவர் இத்தகைய பின்தங்கிய கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்திற்கு விஜயம் செய்தது இதுவே முதற்தடவையெனக்கூறப்படுகிறது.