தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கு வீட்டிலிருந்து கற்பதற்கான கையேடு விநியோகம்


(எஸ்.நவா)
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தரம் 5 புலமைபரிசில் பரீட்சைக்கு
மாணவர்களைத் தயார்படுத்தும் நோக்கில் பகுதி - 2 செயலட்டை
(கையேடு) விநியோகம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று
செவ்வாய்க்கிழமை (26) போரதீவுப் பற்று பிரதேச செயலாளர்
ஆர்.ராகுலநாயகி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

நாட்டில் Covid - 19 வைரஸ் தாக்கம் ஏற்பட்டு பாடசாலைகளுக்கு
விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில்; தரம் 5 புலமைப்பரிசில்
பரீட்சையில் தோற்றவிருக்கும் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட
மாணவர்களுக்கு விசேட செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத
சூழ்நிலையில் வீட்டிலிருந்தவாறே மாணவர்கள் கற்பதன்மூலம் சித்தி
வீதத்தினை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுக்கும்
முயற்சியில் இச் செயலட்டைகள் தயாரிக்கப்பட்டு திருமதி. ந. புள்ளநாயகம் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு போரதீவுப்பற்று பிரதேச செயலாளரினால் கையளிப்பட்டுள்ளன.

107 பக்கங்கள் கொண்ட இச்செயலட்டையினை அச்சுப்பதிப்பதற்கு
பெரியகல்லாறு கடலாட்சியம்மன் ஆலய பக்தர்கள், செங்கலடி இராசநாயகம் அறக்கட்டளையினர், வெல்லாவெளி சக்தி
கலாமன்றத்தினர், மற்றும் போரதீவுப் பற்று பிரதேச செயலக
உத்தியோகத்தர்கள் ஆகியோர் நிதியளித்து பங்களிப்பு வழங்கியுள்ளனர்.
இந்நிகழ்வின்போது பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர், உதவி
பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் நிருவாக
உத்தியோகத்தர், ஆரம்பப் பிரிவுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர்,
கோட்டக்கல்வி அதிகாரி, சக்தி கலாமன்றத்தினர், வெல்லாவெளி மற்றும்
களுவாஞ்சிக்குடி பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள்
கலந்து கொண்டிருந்தனர்.

பிரதேச செயலாளர் தனது தலைமை உரையில், இந்த விடுமுறை
காலத்தைப் பயன்படுத்தி தங்களை வளப்படுத்திக் கொள்ள அதிபர்களும்,
ஆசிரியர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும், பெறுமதி மிக்க இச்
சேவையினை வழங்க உதவிய அனைவருக்கும் நன்றியினையும்
தெரிவித்தார்.