காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகள் வழங்கிவைப்பு

காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு யூனானி முறையிலான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகை மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டது.

கொரோனா நோய்த் தொற்று மக்களிடையே பரவாமலிருக்க துரிதமாக செயற்பட்டு வரும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு யூனானி வைத்திய முறையிலான நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் மருந்துகள் யூனானி வைத்தியர் குழுவினரால் வழங்கி வைக்கப்பட்டது.

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளுக்கிணங்க கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் அக்கரைப்பற்று யூனானி மருந்துற்பத்தி பிரிவினால், உடலின் நிர்பீடனத்தை அதிகரிப்பதற்காக தயாரிக்கப்பட்ட இம்மருந்துகளை காத்தான்குடி ஆயுர்வேத மத்திய மருந்தக மருத்துவப் பொறுப்பதிகாரி டாக்டர். எம்.எப்.எம். சில்மி தலைமையிலான வைத்தியர் குழு இம்மருந்துப் பொருட்களை விநியோகித்தது.

இலங்கையில் பரவியுள்ள கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் முகமாக சுகாதாரத் திணைக்களம் நாட்டில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஓர் அங்கமாக கிழக்கு மாகாண உள்நாட்டு வைத்தியத் துறை ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர். ஸ்ரீதர் அவர்களின் வழிகாட்டலிலும் மட்டக்களப்பு மாவட்ட உள்நாட்டு வைதிய இணைப்பாளர் வைத்தியர் திருமதி ஜே. பாஸ்கர் அவர்களின் மேற்பார்வையிலும் காத்தான்குடியில் பல அரச நிறுவனங்களிலும் ந் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இதன் தொடராகவே இம்மருந்துகள் காத்தான்குடி பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியடம் கையளிக்கப்பட்டது. இதன் போது டாக்டர் எம்.என்.எம். முஸ்தாக்கினால் நிகழ்வில் கலந்து கொண்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று சம்பந்தமாக விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டதோடு கொரோனா தொற்றை இலங்கையில் இருந்து முற்றாக ஒழிப்பதற்கு அதிமேதகு ஜனாதிபதி தலைமையில் அங்கம் வகிக்கும் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையினரின் பங்களிப்பு பற்றி விளக்கமளிக்கப்பட்டது. மேலும் யூனானி வைத்தியர்களான டாக்டர் முஸ்தாக் மற்றும் டாக்டர் ஏ.ஆர்.எம். ரிஸ்வி ஆகியோர் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இதனைப் பயன்படுத்துவது தொடர்பான விளக்கங்களையளித்து மருந்துகளை வழங்கி வைத்தனர்.