இன்று அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் பாராளுமன்றிற்கு!


(ஜே.எப்.காமிலா பேகம்)
மறைந்த இ. தொ.கா. தலைவரும் முன்னாள் சமூக வலுவூட்டல் மற்றும் மலையக உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானுக்கு அரச அஞ்சலி செலுத்தும் நோக்கில், அன்னாரது பூதவுடல் இன்று (28) நாடாளுமன்ற வளாகத்துக்குக் கொண்டுவரப்படவுள்ளது.

அதன்படி, இன்று முற்பகல் 10.45 மணி முதல் 11.30 மணிவரை அன்னாரின் பூதவுடல் நாடாளுமன்ற ஒன்றுகூடல் மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. அதன் பின்னர் 11.30 மணிக்கு பூதவுடல் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து எடுத்துச் செல்லப்படும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எட்டாவது நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற வளாகத்தில் காலஞ்சென்ற ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

இதேவேளை, மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த விரும்பும் சகல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்துடன் இணைந்த திணைக்களங்களின் அதிகாரிகள், நாடாளுமன்ற பணியாளர்கள் அனைவரும் முற்பகல் 10.15 மணியளவில் நாடாளுமன்ற ஒன்றுகூடல் மண்டபத்துக்கு சமூகமளிக்குமாறு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.